உள்ளாட்சி தேர்தலில் மநீம தனித்து போட்டி : கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, தனித்து போட்டியிடும் என கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6ம் தேதி மற்றும் 9ம் தேதி 2 கட்டங்களாக நடைபெறுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை உள்பட 9 மாவட்டங்களுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த பாமக, தேமுதிக, இந்த தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளன. இந்நிலையில் தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிவிட்டரில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில், ‘உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே’ என தெரிவித்துள்ளார். பின்னர், அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிட விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகம் மற்றும் மாநில தலைமை அலுவலகத்தில் நேரடியாக விருப்ப மனு படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். உடனடியாக விண்ணப்பிக்கும் பொருட்டு ஆன்லைன் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மாவட்ட, மாநில தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளைத் தொடர்புகொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>