×

திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்

* ஒரு நாளைக்கு 22,500 பேர் பயனடைவர்
* முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்தார்

சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி, பழனி தண்டாயுதபாணி கோயிலை தொடர்ந்து சமயபுரம், திருத்தணி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு கோயிலிலும் நாள் ஒன்றுக்கு 7500 என மூன்று வேளைக்கு 22,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும், கோயில்களில் பக்தர்களுக்காக ‘அன்னதான திட்டம்’ கடந்த 2002 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், மதிய வேளையில் தினமும் 100 முதல் 250 பேருக்கு என 754 கோயில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ரங்கம் ரங்கநாதசுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணிசுவாமி கோயில் ஆகிய கோயில்களில் மட்டும் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அன்னதான திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த அறநிலையத்துறை முடிவு செய்தது. இது தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சமயபுரம், திருத்தணி, திருச்செந்தூர் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படவுள்ள 3 கோயில்களிலும் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அன்னதான கூடங்களில் அதற்கான வசதிகள் இருக்கிறதா, என்ன மாதியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதன்பேரில், அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதான திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10.30 மணியளவில் தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, 3 கோயில்களில் உடனடியாக நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த அன்னதானத் திட்டத்தின் வாயிலாக இம்மூன்று கோயில்களிலும் நாள்தோறும் சுமார் 22,500 பக்தர்கள் பயனடைகின்றனர். இக்கோயில்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை உணவு பரிமாறப்படும். இந்த திட்டம் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, நாசர், தலைமை செயலாளர் இறையன்பு,  அறநிலையத்துறை செயலாளர் சந்தர மோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், திருச்சி கலெக்டர் சிவராசு, தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



Tags : Annathanam ,Thiruthani ,Thiruchendur ,Samayapuram , Annathanam throughout the day at Thiruthani, Thiruchendur and Samayapuram temples
× RELATED திருத்தணியில் வருமான வரித்துறை சோதனை!!