இந்தியாவில் இருந்து 6 மாதத்தில் கொரோனா ஒழியும்: தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் நம்பிக்கை

புதுடெல்லி: `நாட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் 6 மாதங்களில் கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது,’ என்று  தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.கொரோனா முதல் அலையில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். 5 மாதங்களுக்கு பிறகு, அதன் பாதிப்பு குறையத் தொடங்கியது. மீண்டும் இந்தாண்டு பிப்ரவரியில் 2ம் அலை தாக்கியது. இதில், தினசரி 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டன. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கிடையே, அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா 3வது அலை தாக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய் இயக்குனர் சுஜித் சிங் நேற்று கூறியதாவது:

நாடு முழுவதும் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தினசரி அதிகளவில் பாதிக்கப்பட்ட கேரளாவில் கூட சில தினங்களாக பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்த, 3 மாதங்களுக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்காத வகையில் கவனமுடன் செயல்பட்டால், அடுத்த 6 மாதங்களில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர வாய்ப்புள்ளது.  மக்கள்தொகை அதிகமுள்ள பகுதிகளில் தொற்று அதிகளவில் பரவுவதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. பண்டிகைகள் நெருங்கி வருவதால், இதனை தடுக்க தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல், கொரோனா விதிகளை பின்பற்றுதல், பாதுகாப்பான பயணம், பொறுப்புடன் பண்டிகையை கொண்டாடுதல் ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும். நாட்டின் 34 மாவட்டங்களில் தொற்று பரவல் 10 சதவீதத்துக்கு அதிகமாகவும் 32 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதத்துக்கு உள்ளாகவும் உள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த தொற்று பாதிப்பில் கேரளாவில் கடந்த வாரம் மட்டும் 67.79 சதவீதமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மோடிக்கு அளிக்கும் பரிசு

ஒன்றிய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா தனது டிவிட்டரில், `பிரதமர் மோடி நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கி உள்ளார். நமது அன்பிற்குரிய பிரதமரின் பிறந்த நாளில், தடுப்பூசி போட்டு கொள்ளாத அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இதுவே பிரதமருக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசாகும்,’ என்று கூறியுள்ளார்.

2 டோஸ் 20% ஒரு டோஸ் 62%

‘நாடு முழுவதும் இதுவரையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 62 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது,’ என்று ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Stories:

>