×

டிஜிட்டல் ஊடகங்களை கண்காணிக்கும் ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டிஜிட்டல் ஊடகங்களை ஒன்றிய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக கூறி அதை தடுப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021ஐ மத்திய அரசு கொண்டு வந்தது.

 இந்த விதிகளை செல்லாது என்று அறிவிக்க கோரி கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பாக பதிலளித்த ஒன்றிய அரசு, சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவும், ஆன்லைன் செய்திகளை ஒழுங்குபடுத்தவுமே விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு சட்டத்தால் தடை செய்யப்பட்ட விஷயங்களை வெளியிடவோ பரப்பவோ கூடாது.

 நாட்டின் ஒற்றுமை, இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, அண்டை நாட்டு உறவை குலைக்கும் தகவலை பகிர்வது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அந்த உத்தரவு நாடு முழுவதற்கும் பொருந்தும். மேலும், இந்த விதிகளை எதிர்த்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய வழக்கு அக்டோபர் முதல் வாரம் விசாரணைக்கு வர உள்ளது என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என்று கூறும் நிலையில் விதிகளை பின்பற்றும்படி டிஜிட்டல் பப்ளிஷர்ஸ் அமைப்பு உறுப்பினர்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப விதியின் 9வது பிரிவின் 3வது உட்பிரிவு டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்கும் என்று கூறியுள்ளது என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒன்றிய அரசு கண்காணிப்பு நடைமுறை மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்துவது, ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் எனக் கூறி அந்த பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் கடைசி வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Chennai High Court ,US government , Chennai High Court orders ban on new information technology rule by the US government that monitors digital media
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...