சொத்து வரி செலுத்தாத 6 கடைகளுக்கு அதிரடி சீல்: மாநகராட்சி நடவடிக்கை

பெரம்பூர்: தண்டையார்பேட்டை மண்டலத்தில் சொத்து வரி பாக்கியை செலுத்தாத 6 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சியில் ரூ.50,000  மற்றும் ரூ.1 லட்சத்துக்கு  மேல் வரி பாக்கி வைத்துள்ளவர்களிடம் அதை வசூலிக்கும் பணியில் மண்டல அளவிலான வருவாய் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி பாக்கியை செலுத்தாதவர்களின் கட்டிடங்கள் முன்பு அறிவிப்பு பேனர் வைப்பது, அதற்கு அடுத்தபடியாக குடிநீர் மற்றும் மின் இணைப்புகளை  துண்டிப்பது, அப்படியும் செலுத்தவில்லை என்றால் சம்மந்தப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தண்டையார்பேட்டை மண்டலம், 41வது வார்டுக்கு உட்பட்ட கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் பல வீடுகள் மற்றும் கடைகளுக்கு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அளித்துள்ளனர். ஆனாலும், சொத்து வரி பாக்கியை செலுத்தாத கட்டிடங்களுக்கு சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கொடுங்கையூர் மணலி சாலை, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில், சுமார் ரூ.1 லட்சம் வரை சொத்து வரி பாக்கி வைத்துள்ள டீக்கடை, சைக்கிள் கடை, இறைச்சி கடை உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட கடைகளுக்கு, தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி கோவிந்தராசு உத்தரவின்பேரில் உதவி வருவாய் அலுவலர் துரைராஜ் வருவாய் அலுவலர்கள் ரமேஷ் ராமன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். அப்போது, சுமார் ரூ.1 லட்சம் வரை சொத்து வரி பாக்கி உள்ளதாகவும், அதனால் கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதாகவும் தண்டோரா அடித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.

* மின் இணைப்பு துண்டிப்பு

சென்னை மாநகராட்சி, 4வது மண்டலம், 36வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சொத்து வரி பாக்கியை செலுத்தாத திருமண மண்டபத்திற்கு பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வரியை செலுத்தாததால், நேற்று வரி மதிப்பிட்டாளர் சீனிவாசன் அந்த மண்டபத்தின் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்தார்.

Related Stories:

More