×

‘முரசொலி சில நினைவுகள்’ நூல் உண்மைகளை உரத்த குரலில் உலகத்திற்கு மீண்டும் நினைவுபடுத்தும்: முரசொலி செல்வம் பேச்சு

சென்னை: ‘முரசொலி சில நினைவுகள்’ என்ற நூல் உண்மைகளை உரத்த குரலில் உலகத்திற்கு மீண்டும் நினைவுபடுத்தும் என்று முரசொலி செல்வம் பேசினார். தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17ம் தேதி ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளையும் இணைத்து திமுக முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடந்தது. விழாவுக்கு, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து விருதுகளை வழங்கினார். அப்போது, முரசொலி செல்வம் எழுதிய, ‘முரசொலி சில நினைவலைகள்’ என்ற நூலை வெளியிட்டார். அதை பொதுச் செயலாளர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். பின்னர் முரசொலி செல்வத்துக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

விழாவில், முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் பேசியதாவது: முதலில் ‘முரசொலி சில நினைவலைகள்’ என தொடங்கிய தொடர் சற்று விரிவடைந்து, நூறு நாட்கள் வரை வளர்ந்தது. எழுத எழுத விரிவடைந்த தொடர், திராவிட இயக்க வரலாற்றில் ‘முரசொலி’ இதழ் ஆற்றியுள்ள பங்கினையும், அது ஏற்றுக் கொண்டுள்ள எண்ணற்ற வீரத் தழும்புகளையும் எண்ணிப் பார்த்து எழுத எழுத அது விரிவடைய தொடங்கியது. இந்த தொடரை முழுமை பெற்ற ஒன்றாகக் கருதி முழு நிறைவு கொள்ள இயலாது. முரசொலி நாளிதழாக தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து நினைவுகளில் முகிழ்ந்து விரிந்து அது தொடங்கப்பட்டுள்ளது. கலைஞர், முரசொலிமாறன் நினைவுகளால் எனது கண்கள் பனிக்கின்றன.

இத்தொடரை எழுதத் தொடங்கிய போது, தேங்கி இருக்கும் குளத்து நீரில் காற்றுப் பட்டு எழும் அலைகள் போல் தோன்றிய நினைவுகள், தொடரத் தொடர ஆர்ப்பரித்து எழும் ஆழ்கடல் அலையாய் உருமாறியது. தோண்டத் தோண்ட செய்திப் புதையல்கள், தேடத் தேட கட்சி மறவர்களின் தியாக வரலாறுகள். அப்பப்பா... எத்தனை எத்தனை நெருப்பாற்றல் நீச்சல்கள். நினைக்க நினைக்க நெஞ்சை ஒவ்வொரு நிமிடமும் கசக்கிப் பிசைந்திடும் வகையில், பாசத்தோடும், நேசத்தோடும் என்னை வளர்த்து ஆளாக்கி ‘இனியவன் என் செல்வம்’ என எழுதி நெகிழ வைத்தவர் என்னுயிர் ஆசான் தலைவர் கலைஞர்.

ஏட்டினை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு நித்தம் நித்தம் கண்டிப்போடு கூடிய பயிற்சியினை அளித்து என்னிடம் அன்பு காட்டிய அண்ணன் முரசொலி மாறன் ஆகியோரின் பல பல நினைவுகளால் என் கண்கள் இப்போதும் பனிக்கின்றன. இத் தொடர் எழுதத் தொடங்கிய பின், தெறித்த நினைவுகளை சான்றுகளோடு தர வேண்டும் என்று எண்ணி பழைய முரசொலி ஏடுகளைப் புரட்டியபோது பல இனிய நினைவுகள் மட்டுமின்றி, இதயத்தைக் கனக்க வைத்த நினைவுகளும் பின்னிப் பிணைந்தன. அன்றும், இன்றும் பல ஊடகங்களிலும் வரலாறுகள் திணிக்கப்பட்டு, கதாநாயகனை வில்லனாகவும், வில்லனை கதாநாயகனாகவும் காட்டி வரும் வேளையில் இந்த தொகுப்பில் வரும் பல நினைவுகள் உண்மைகளை உரத்த குரலில் உலகத்திற்கு மீண்டும் நினைவுபடுத்தும் என்று நம்புகிறேன்.

உண்மைக்கு மாறான செய்திகளை இத்தொடர் ஓரம் கட்டும். மின்மினிப் பூச்சிகளை ஜொலிக்கும் நட்சத்திரங்களாக இன்றும் சித்தரிக்கும் சிலர், வரலாற்றின் கருப்புப் பக்கங்களுக்கு வண்ணம் பூசியும், வண்ணப் பக்கங்களை கருப்புப் பக்கங்களாக பதிவு செய்தும் புதிய தலைமுறையினரின் உள்ளத்தில் உண்மைக்கு மாறான செய்திகளை பயிற்று வருவதை இத்தொடர் உண்மையில் ஓரம் கட்டும் என்று எண்ணுகிறேன். தொடர் தொடங்கியதும், நித்தம் நித்தம் தொலைபேசியில் பலர் என்னை அழைத்து இந்த காலக் கட்டத்திற்கு இத்தொடர் தேவையான பணி தொடருங்கள் என்று என்னை ஊக்கப்படுத்தினர். அத்தனை பேருக்கும் என்னிடம் பேசியபோதே, தனித்தனியே நன்றியை தெரிவித்து இருக்கிறேன்.

இந்தப் பட்டியல் பெரியது என்பதால், அவர்கள் பெயர்களை மீண்டும் குறிப்பிட இயலாது என்ற நிலையில் ஒட்டு மொத்தமாக அவர்கள் அனைவருக்கும் இங்கே எனது நன்றியை தெரிவிக்கிறேன். இத்தொடரை நான் எழுதும் போது, ஒவ்வொரு நாளும் அச்சுக்குப் போகும் போது, படித்து ஆலோசனை வழங்கிய கி.ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்., இது நூலாக வெளிவர பெரும் முயற்சி எடுத்து அந்தப் பணியில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட கலைஞரின் செயலாளர் கோ.சண்முகநாதனுக்கும் ஆதாரத்திற்கு சில பழைய ஏடுகள் தேவைப்பட்ட போது தேடி எடுத்துத் தந்த கலைஞர் இல்ல உதவியாளர்கள் மோகன், வடிவேல் மற்றும் தமிழ்தாசன், பேராசிரியர் அன்பழகனார் நூலக உதவியாளர்கள் சுந்தரம், பத்மநாபன் மற்றும் முரசொலி ஆசிரியர் குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர் வரும்போது அன்றாடம் தொலைபேசி வாயிலாக பேசி வந்த இன்றைய திமுக தலைவர் தம்பி ஸ்டாலின், இந்த நூலுக்கு நெகிழுரை எனுமளவிற்கு நெஞ்சை நெகிழ வைக்கும் அளவுக்கு அரியதோர் அணிந்துரை வழங்கியுள்ளார். அதுபோல பொதுச் செயலாளர் துரைமுருகன், உருக்கமான நட்பு எனக்கும் அவருக்கும், அவர் இந்த நூலுக்கு எழுதியுள்ள சிறப்புமிகு அணிந்துரை, நூல் குறித்தும் அவர் எழுதி இருப்பதை விட நூலாசிரியர் குறித்து எழுதியுள்ளது சிறிது தூக்கலாகவே அமைந்திருந்தது.

அணிந்துரைகள் வழங்கியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்றுத் தொகுப்பை மிகச் சிறப்பாக வெளிக் கொண்டு வந்த சீதை பதிப்பகத்தாருக்கும், அட்டை படத்தினை அழகுற வரைந்து வழங்கிய அரசு ஆர்ட்ஸ் கோபிக்கும், பிழை திருத்திய புலவர் வாவாசிக்கும் எனது நன்றி. இந்தப் பெருமைமிகு விழாவில் இந்தப் புத்தகத்தை வெளியிட அனுமதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : ‘Some Memories of Murasoli’ will remind the world of the facts aloud: Murasoli Wealth Talk
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...