×

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி வீடு, அலுவலகங்களில் ரெய்டு

* சென்னை, வேலூர், திருப்பத்தூர், பெங்களூருவில் சொகுசு பங்களா, ஸ்டார் ஓட்டல் என 35 இடங்களில் விஜிலன்ஸ் அதிரடி
* 5 கிலோ தங்கம், 9 சொகுசு கார் பல கோடி சொத்து ஆவணம் பறிமுதல்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு சொந்தமான சென்னை, வேலூர், திருப்பத்தூர், பெங்களூரு என 35 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பினாமிகள் பெயரில் வாங்கி குவிக்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகள், பென்டிரைவ் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கே.சி.வீரமணி அமைச்சராக இருந்த 2013-2016  மற்றும் 2016-2021 ஆகிய காலக்கட்டத்தில் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக 654 விழுக்காடு சொத்துகளை வாங்கி குவித்து இருப்பது தெரியவந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை எடையம்பட்டி காந்தி சாலையை சேர்ந்தவர் கே.சி.வீரமணி. இவரது தந்தை சின்னராசு. இவர், கே.கே.சின்னராசு அன்ட் கோ என்ற பெயரில் பீடி கம்பெனி மற்றும் அகிலா டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தார். தந்தை சின்னராசு இறப்புக்கு பிறகு கே.சி.வீரமணி அவரது சகோதரர்களான கே.சி.அழகிரி, கே.சி.காமராஜ் ஆகியோருடன் தனது தந்தை தொழிலை நடத்தி வந்தார். அதிமுக வில் அதிகளவில் கே.சி.வீரமணி ஈடுபாட்டுடன் இருந்ததால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011ம் ஆண்டு ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற கே.சி.வீரமணி கடந்த 2013ம் ஆண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிறகு அடுத்தடுத்து விளையாட்டு துறை, தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். பிறகு 2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் கே.சி.வீரமணி வெற்றி பெற்றார். மீண்டும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக 2021ம் ஆண்டு வரை பதவி வகித்தார். 2011ம் ஆண்டு கே.சி.வீரமணி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நிகர சொத்து என்பது 7.48 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், 2011-2021 வரையில் கே.சி.வீரமணி மற்றும் அவரது குடும்பத்தார் ரூ.91.2 கோடி மதிப்பு சொத்து குவித்ததாக புகார் எழுந்தது.  கடந்த 10 ஆண்டுகளில் அவர் பெயரிலும், குடும்பத்தார் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு பல கோடி ரூபாயாக  உயர்ந்துள்ளது.

கே.சி.வீரமணி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில், துறை அதிகாரிகளுடன் சேர்ந்து விலையை குறைத்து  மதிப்பீடு செய்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கே.சி.வீரமணியின் பெயரில்  உள்ள அசையும் சொத்து மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் ரூ.43 கோடி அதிகமாகியுள்ளது. அவர் பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் பல அசையா  சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, சென்னை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த 10 ஆண்டுகளில் சொகுசு பங்களா, நட்சத்திர ஓட்டல் என அசையா சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தனது மாமனார் பெயரில் 100 ஏக்கர் நிலத்தை 2015ம் ஆண்டு சட்டத்திற்கு புறம்பாக வாங்கி குவித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. கே.சி.வீரமணி தனது பதவி காலத்தில் வருவாய்க்கு அதிகமாக ரூ.150 கோடிக்கும் அதிகமான அளவில் சொத்து சேர்த்துள்ளது  தெரியவந்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த தொடர் புகாரை தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விஜய், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி  மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். குறிப்பாக, அமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் தனது வருவாய்க்கு அதிகமாக 654 சதவீதம் சொத்துகள் வாங்கி குவித்து இருப்பதும், அதற்கான ஆவணங்களும்  சிக்கியுள்ளது. வலுவான ஆதாரங்கள் சிக்கியதை  தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான சென்னையில் உள்ள 6 இடங்கள், பெங்களூருவில் 6 இடங்கள், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 35 இடங்களில் நேற்று அதிகாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

சென்னையில் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள லீத் கேஸ்டில் வடக்கு தெருவில் உள்ள கே.சி.வீரமணியின் சொகுசு பங்களா வீடு, கொளத்தூர் செண்பகா நகர் முருகன் கோயில் தெருவில் உள்ள வீடு மற்றும் கே.சி.வீரமணியின் தொழில் நண்பரான சூளைமேடு சிவானந்தா சாலையில் உள்ள பிரபல பால் நிறுவனத்தின் மேலாளர் ராம ஆஞ்சநேயலுவுக்கு சொந்தமான வீடு மற்றும் அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள வீடுகளில் சோதனை நடந்தது. சாந்தோமில்  உள்ள கே.சி.வீரமணிக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் நேற்று நள்ளிரவு வரை 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் இருந்த  நபர்களிடம் சொத்துப்பத்திரம் மற்றும் வங்கி பரிமாற்ற புத்தகம் கைப்பற்றப்பட்டது. சூளைமேடு சிவானந்தா சாலையில் உள்ள கே.சி.வீரமணியின் தொழில் நண்பரான பிரபல பால் நிறுவனத்தில் மேலாளர் ராம ஆஞ்சநேயலுக்கு சொந்தமான வீட்டில் யாரும் இல்லை. இதனால் அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அந்த வீட்டிற்கு சீல் வைத்தனர். அதேபோல், அண்ணாநகரில் உள்ள பிரபல பால் நிறுவனத்தில் மேலாளர் ராம ஆஞ்சநேயலு வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வந்தனர். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரக்கு ராம ஆஞ்சநேயலு  ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது வீட்டின் முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர்.

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான வீட்டில் நேற்று காலை 6.30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கிருஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் 10 போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து கே.சி.வீரமணியின் செல்போனை வாங்கி சுவிட்ச் ஆப் செய்தனர். பிறகு கே.சி.வீரமணி முன்னிலையில்  வீடு முழுவதும் சோதனை நடத்தி பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், பணம், நகைகள் குறித்து கே.சி.வீரமணியிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர் அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணியின் 2வது மனைவி பத்மாசினி வீடு, ஏலகிரி, ஓசூரில் வீரமணிக்கு சொந்தமான ஓட்டல், திருமண மண்டபத்திலும் சோதனை நடந்தது. அதேபோல், கே.சி.வீரமணியின் சகோதரர்களான கே.சி.அழகிரி, கே.சி.காமராஜ் வீடு மற்றும் அலுவலகங்கள், கே.சி.வீரமணியின் உதவியாளர் ஆர்.ஆர்.ரமேஷ், ஜோலார்பேட்டை ஒன்றிய அதிமுக செயலாளர் தாமலேரிமுத்தூர் ஆர்.ரமேஷ், நாட்றம்பள்ளி ஒன்றிய செயலாளரும், ஒப்பந்ததாரருமான மல்லகுண்டா ராஜா, மாவட்ட கவுன்சிலர் சாம்ராஜ் ஆகியோர் வீடுகளிலும் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவிமலையில் உள்ள கே.சி. வீரமணியின் மாமனார் வீடு, பினாமிகள் என்று கூறப்படும் வேலூரில் ஒன்றிய செயலாளர் கர்ணல், வேலூர் மாவட்ட அதிமுக துணை செயலாளர் சேண்பாக்கம் ஜெயபிரகாஷ், வெட்டுவாணத்தில் உள்ள கே.சி.வீரமணியின் உதவியாளர் புகழேந்தி, அரக்கோணத்தில் மற்றொரு உதவியாளரும், மாவட்ட பாசறை செயலாளருமான ஷ்யாம் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல் கே.சி.வீரமணிக்கு சொந்தமான குடியாத்தத்தில் உள்ள வேளாண்மை கல்லூரியிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி சொத்து ஆவணங்கள், கணினிகள், லேப்டாப்புகள் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகள், அவரது  நிறுவனங்கள் மற்றும் அவரது பினாமிகளின் வீடுகள், நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவதை அறிந்த வாணியம்பாடி அதிமுக  எம்எல்ஏ செந்தில்குமார் உட்பட அதிமுகவினர் ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி. வீரமணி வீட்டின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கே.சி.வீரமணி வீட்டின் முன்பு  போலீஸ் குவிக்கப்பட்டது. அப்போது வீரமணியின் முகத்தை காட்ட வேண்டும் என்று கூறி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, வேலூர், பெங்களூரு உட்பட 35 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 34 லட்சத்து ஆயிரத்து 60 ரூபாய் ரொக்கம், 1.80  லட்சம் மதிப்புள்ள அமெரிக்கா டாலர், வெளிநாட்டில்  இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ ரோல்ஸ் ராய்ல்ஸ்’ சொகுசு கார் உட்பட பல கோடி மதிப்புள்ள 9 சொகுசு கார்கள், 5 கணினிகளின் ஹார்ட் டிஸ்க், 4.98 கிலோ தங்கம் (623 சவரன்), 47 கிராம் விலை உயர்ந்த வைரம், 7.2 கிலோ வெள்ளி  பொருட்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், சட்ட விரோதமாக வீட்டு வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள 275 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை வைத்து கே.சி. வீரமணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

* பெங்களூருவிலும் அதிரடி
பெங்களூருவில் கிழக்கு மண்டலம் மற்றும் தென் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த வீரமணியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான வீடு, ஓட்டல் என 3 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதியம் வரை நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனை குறித்து பெங்களூரு நகர போலீசாருக்கு எந்தவிதமான முன் தகவலும் தெரிவிக்கவில்லை. ரகசியமான முறையில் 4 குழுவாக வந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

* நகை மதிப்பீட்டாளர்கள் கணக்கீடு
ஜோலார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது சகோதரர்கள்  கே.சி.அழகிரி, கே.சி.காமராஜ் மற்றும் அவரது மனைவி வீடுகளில் நடந்த ரெய்டில் பல்வேறு பண பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் ஜோலார்பேட்டையில் வீரமணி வசித்து வரும் வீட்டில் சோதனையின் இடையே  நேற்று மதியம் 2 மணியளவில் நகை மதிப்பீட்டாளர்கள் அவசரமாக அழைத்து வரப்பட்டு நகைகள் கணக்கீடு செய்யப்பட்டது.

* கே.சி.வீரமணியின் மாமனார் வீட்டை சோதனை செய்ய அனுமதிக்காமல் அடாவடி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவிமலையில் உள்ள வீரமணியின் மாமனார் பழனியின் பூர்வீக வீட்டுக்கு அதிகாலை 4.30 மணியளவில் டிஎஸ்பி மதியழகன், இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான லஞ்சஒழிப்பு போலீசார் 8 பேர் கொண்ட குழுவாக சென்றனர். அந்த வீட்டில் அப்போது பழனியின் தம்பி கார்த்திகேயன் இருந்தார். பழனி சென்னையில் தனது மகள் மேகலாவின் வீட்டில் தங்கியிருந்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்த தகவல் கார்த்திகேயன் மூலம் தெரிவிக்கப்பட்டதும், அங்கிருந்து கிடைத்த வழிகாட்டலின்படி கதவை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கதவை திறக்காவிட்டால் சீல் வைக்கப்படும் என்ற போலீசாரின் எச்சரிக்கையை தொடர்ந்து வீட்டை திறந்தனர்.தொடர்ந்து காலை 9.30 மணிக்கு தான் அந்த வீட்டில் சோதனை தொடங்கியது. சோதனையின்போது, மாமனாரின் பூர்வீக வீட்டின் அருகில் கட்டப்பட்டு வரும் பங்களாவுக்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அறைகள், அடுக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் சோதனையிட்டனர்.  அங்கு எதுவும் கிடைக்காததால் பூர்வீக வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு சொத்து ஆவணங்களையும், ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ் ஆகியவற்றையும் கைப்பற்றி எடுத்து சென்றனர்.

* நட்சத்திர ஓட்டலில் சிக்கிய முக்கிய ஆவணம்
கிருஷ்ணகிரி  மாவட்டம், ஓசூர் அருகே மூக்கொண்டப்பள்ளியில் முதலாவது சிப்காட் பகுதியில்,  கே.சி.வீரமணிக்கு சொந்தமான ஹில்ஸ் என்ற பெயரில் 5 அடுக்கு மாடி கொண்ட நட்சத்திர ஓட்டல் உள்ளது. அங்கு, நேற்று காலை லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்த ஏடிஎஸ்பி திவ்யா தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் கோயம்புத்தூரில் இருந்து வந்து அதிரடி சோதனை நடத்தினர்.இந்த சோதனையின் போது ஓட்டலுக்குள்ளேயும், வெளியேயும் யாரையும் அனுமதிக்க வில்லை. நட்சத்திர ஓட்டலில் நடந்த சோதனையில் பினாமிகள் பெயரில் வாங்கி குவிக்கப்பட்ட பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியது. இந்த சோதனையின் போது ஓட்டல் வளாகத்தில் ஏஎஸ்பி அரவிந்த், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* சிமென்டுக்கு ஜிஎஸ்டி கட்டாமல் அரசுக்கு வருவாய் இழப்பு
மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி ஆந்திர மாநிலத்தில் தனியார் சிமென்ட் கம்பெனியில் பங்குதாரராக இருந்து வருகிறார். அங்கிருந்து உற்பத்தி செய்யப்படும்  சிமென்ட் மூட்டைகள் லாரிகள் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்தபோது சிமென்ட் மூட்டைகளுக்கு ஜிஎஸ்டி வரி கட்டாமல் அப்படியே நேரடியாக தமிழகத்துக்கு எடுத்துவந்துள்ளனர். ஒரு சிமென்ட் மூட்டை ரூ.300 என்றால் அதற்கு ஜிஎஸ்டி ரூ.72 கட்ட வேண்டும். ஆனால் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார்.

சிமென்ட் மூட்டைகளை லாரிகள் மூலம் கொண்டு வரும்போது சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தக் கூடாது என்று உத்தரவிட்டு இருந்தார். எந்தந்த லாரிகள் லோடு ஏற்றி வரும் என்பது குறித்த பட்டியலை சோதனைச்சாவடியில் முன்கூட்டியே கொடுத்துவிடுவார்கள். இதனால் அந்த லாரிகளை அதிகாரிகள் சோதனையிடவும், தடுத்து நிறுத்தவும் மாட்டார்கள். அதேபோல் கே.சி.வீரமணியின் பினாமிகள்  பெயரில் டிப்பர் லாரிகள் மூலம் மணல் கடத்தலும் சர்வசாதாரணமாக நடந்தது. இவற்றின் மூலம் பல கோடிகள் வரை கே.சி.வீரமணிக்கு வருமானம் கிடைத்துள்ளது. அதற்கான ஆவணங்களும் நேற்று நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Minister ,KC Veeramani , Accumulation of assets in excess of income Raid on the house and offices of former Minister KC Veeramani
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...