×

கட்சி தாவலுக்கு தயாராகும் மாஜி அதிமுக அமைச்சர்: பெயர், சின்னம் இல்லாமல் போஸ்டர்

கோவை: கோவையில் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் கட்சி பெயர், சின்னம் இல்லாமல் அச்சடித்து போஸ்டர் ஒட்டினார். இதனால் அவர், கட்சி தாவலுக்கு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. கோவை மாநகராட்சியில் கடந்த 2012ம் ஆண்டு அதிமுக சார்பில் மேயராக இருந்தவர் செ.ம.வேலுசாமி. இவர், கோவை மாநகராட்சியின் 4வது மேயர் ஆவார். உள்கட்சி பிரச்னை காரணமாக 4வது ஆண்டிலேயே மேயர் பதவியை இழந்தார். அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மீதமுள்ள ஓராண்டு காலத்தில் கணபதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ராஜ்குமார் மேயராக இருந்தார். செ.ம.வேலுசாமி கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்தார். 2001ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வரை வணிக வரித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

பல முக்கிய பொறுப்புகளில் இருந்தாலும், மேயர் பதவியில் இருந்து செ.ம.வேலுசாமி நீக்கப்பட்டதில் இருந்து, கட்சியில் முக்கியமான பதவி எதுவும் கொடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக இரண்டாக உடைந்தபோது இபிஎஸ் அணியில் இருந்தார். தற்போதும் இபிஎஸ் அணியில்தான் இருக்கிறார். ஆனாலும், இவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் கோவையில் நேற்று அதிமுக சார்பில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழாவில், எம்எல்ஏக்கள் ஜெயராம், அம்மன் அர்ஜூனன் உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். ஆனால் செ.ம.வேலுசாமி இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை.

மாறாக, தனியாக போஸ்டர் அச்சடித்து, நகரின் முக்கிய வீதிகளில் ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் அதிமுக பெயர், அதிமுக சின்னம், தற்போதைய தலைவர்களான இபிஎஸ், ஓபிஎஸ் படம், மாவட்ட செயலாளர் படம் என எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை. மாறாக, ‘செ.ம.வேலுசாமி, முன்னாள் மேயர், முன்னாள் அமைச்சர்’ என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார். ‘‘போஸ்டரில், சாதாரண மனிதனும் மக்கள் பிரதிநிதியாக முடியும் என்று உலகத்திற்கு காட்டிச்சென்ற தன்னலமில்லாமல் மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள்... மூத்தகுடி தமிழ்மண் காக்க சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் விட்டுச்சென்ற அண்ணாவின் கொள்கைகளை தன்னமில்லாமல் வழிநடத்துபவர்கள் வழி நடப்போம் என பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்களின் 113வது பிறந்த நாளில் சூளுரைப்போம்’’ என குறிப்பிட்டுள்ளார். இதனால் மாஜி அமைச்சர் வேலுசாமி கட்சித்தாவ தயாராகி விட்டார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags : Magi ,Minister , Former AIADMK minister preparing for party tab: Poster without name, logo
× RELATED 40க்கு 40 என்ற சபதத்தை முதல்வர்...