அமளியால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் பெண் எம்பி திடீர் ராஜினாமா: மேற்குவங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: நாடாளுமன்ற அமளியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் எம்பி அர்பிதா கோஷ், தனது எம்பி பதவியை திடீரென ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான அர்பிதா கோஷ், மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார், அவரது ராஜினாமாவை அவைத் தலைவரும் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற மேலவை செயலகம் அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மேல்சபையில் நடந்த அமளியின் போது இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் அர்பிதா கோஷூம் ஒருவராவார்.

முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு, அர்பிதா கோஷ் எழுதிய கடிதத்தில், ‘மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்ததற்காக கட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேற்குவங்க தேர்தல்வெற்றிக்கு பின்னர், கட்சிப் பணியில் ஈடுபட விருப்பம் அதிகரித்து வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மேற்குவங்க மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய விரும்புகிறேன். எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மக்களுக்கு நேரடியாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பலூர்காட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அர்பிதா கோஷ், கடந்த 2020 மார்ச்சில் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே, 2014ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் பலூர்காட் தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>