அனுபவமே இல்லாத 4 பேரை விண்ணுக்கு அனுப்பிய 'ஸ்பேஸ் எக்ஸ்'.. 3 நாட்கள் பூமியை சுற்ற போகும் அதிசயம்!

புளோரிடா : அமெரிக்காவின் ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் கோடீஸ்வரர் ஜாரிட்  ஐசக் மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு பயணம்  செய்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடாவின் கேப் கனாவெரலில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, இன்று அதிகாலை 5.30 மணியளவில் (இந்திய நேரப்படி) சாதாரண மக்கள் நான்கு பேருடன் ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ டிராகன் கேப்சூல் விண்வெளிக்கு புறப்பட்டது. தொழிலதிபர் ஆலன் மஸ்க்கின் அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்,  நான்கு சாதாரண மக்களை விண்வெளிக்கு அனுப்பி புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது.  இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த விண்கலத்தில் பயணம் செய்த 4 பேரில் ஒருவர் கூட தொழில்முறை  விண்வெளி வீரர் இல்லை. இந்த புதிய முயற்சியால், உலகிலேயே முதன்முறையாக, சாதாரண மக்களையும் விண்வெளிக்கு அனுப்ப முடியும் என்ற சாதனையை ஸ்பேஸ்எக்ஸின் நிறுவனம் செய்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் இருந்து 357 மைல் (575 கிலோமீட்டர்)  உயரத்தில், மூன்று  நாட்கள் பூமியின் சுற்றுப்பாதையில் இந்த விண்கலம் இயங்கும். இந்த விண்வெளி பயணத்திற்கு இன்ஸ்பிரேஷன் - 4 என்று  பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, மனிதர்கள் இவ்வளவு  உயரத்தில் நிலைகொண்டு இருப்பார்கள். ஸ்பேஸ்எக்ஸின் விண்கலமானது, பால்கன் - 9 ராக்கெட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த விண்வெளி பயணத் திட்டத்தின் பின்னால் பில்லியனர் தொழிலதிபரும், ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ஜாரெட் ஐசக்மேன் உள்ளார். இவரது தலைமையில்தான் மற்ற மூன்று பேரும் பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து நாசா வெளியிட்ட அறிவிப்பில், ‘பூமியிலிருந்து 575 கி.மீ உயரத்தில் இந்த விண்கலம் அடுத்த 3 நாட்களுக்குச் சுற்றி வரும். மணிக்கு 27,300 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும். 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றிவரும். 3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பிறகு அட்லாண்டிக் கடலில் பால்கான் ராக்கெட் வெற்றிகரமாகத் தரையிறங்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விண்வெளிச் சுற்றுலாவுக்காக சென்ற 4 பேரும் கிட்டதட்ட 9 மாதங்கள் ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்றனர். புவிஈர்ப்பு சக்தியில்லாத இடத்தில் எவ்வாறு நடந்து கொள்வது, எவ்வாறுபயணிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளிச்சுற்றுலா மூலம் திரட்டப்படும் 20 கோடி டாலர்கள் குழந்தைகளுக்கான புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விண்வெளிப் பயணம் குறித்த சிறப்புத் தொகுப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆவணப்படமாக வெளியிடுகிறது.

Related Stories: