×

புனே, ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் 5,32,250 டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தது.!

மீனம்பாக்கம்: தமிழ்நாட்டிற்கு மேலும் 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள், 1,32,250 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் என மொத்தம் 5,32,250 டோஸ் தடுப்பூசிகள் புனே மற்றும் ஐதராபாத்தில் இருந்து விமானங்களில் சென்னை வந்தன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் அக்டோபர் மாத இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதோடு அனைவரும் முகக்கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை சுத்தப்படுத்துவது ஆகிய பாதுகாப்பு விதிமுறைகளும் முழுமையாக அமுல்படுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் 3வது அலை பரவலை தடுப்பதற்காக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டு கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது. மேலும் தடுப்பூசி முகாம்களையும் நடத்துகிறது. இதனால் பொதுமக்களும் ஆர்வமாக வந்து தடுப்பூசிகளை செலுத்தி கொள்கின்றனர்.

இதனால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. எனவே ஒன்றிய அரசிடம், தமிழக அரசு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க கோரியுள்ளது. இதையடுத்து ஒன்றிய சுகாதார துறை, 5,32,250 டோஸ் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை தமிழகத்துக்கு விடுவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 34 பார்சல்களில் நேற்று இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தது. அதேபோல ஐதராபாத்தில் இருந்து 1,32,250 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் 27 பார்சல்களில் சென்னை வந்தது. அவைகளை, சென்னை விமான நிலைய அதிகாரிகள், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் வாகனங்களில் ஏற்றப்பட்டு தேனாம்பேட்டைக்கு எடுத்து செல்லப்பட்டது. ேதவைப்படும் மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai ,Pune, Hyderabad , 5,32,250 doses of vaccines arrived in Chennai by air from Pune, Hyderabad.!
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...