×

மாஜி அமைச்சர் வீரமணி 654 சதவீதம் சொத்து குவிப்பு: முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தகவல்

சென்னை: மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்தபோது 654 சதவீதம் சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் வீரமணி அமைச்சராக இருந்த 2016 மற்றும் 2021ம் ஆண்டு வரை வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடு மற்றும் ஊழல் மூலம் சொத்து குவித்ததாக புகார் எழுந்ததால், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் முதல் தகவல் அறிக்கையை வேலூர் முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாக்கல் செய்தனர். அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: குற்றம்சாட்டப்பட்ட கே.சி.வீரமணி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகேயுள்ள இளையாம்பட்டியை சேர்ந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவரது தந்தை கே.கே.சின்னராசு பீடி கம்பெனி நடத்திவந்தார். கே.கே.சின்னராசு அன்ட் சன்ஸ் என்ற பெயரில் நடத்தி வந்த இந்த கம்பெனியை சின்னராசுவின் மறைவுக்கு பிறகு கே.சி.வீரமணியும் அவரது சகோதரர்கள் கே.சி.அழகிரி, கே.சி.காமராஜ் ஆகியோர் நடத்தி வந்தனர்.

இது மட்டுமல்லாமல் அகல்யா டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரது மனைவி பத்மஷினி கடந்த 2016  நவம்பர் 9ல் காலமானார். இதையடுத்து, மேகலை என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு இனியவன் என்ற மகனும், யாசினி, அகல்யா என்ற மகள்களும் உள்ளனர். கடந்த 2011ல் ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2013ல் இருந்து 2016வரை பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.  இடைப்பட்ட காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் கூடுதல் பதவியையும் வகித்து வந்தார். கடந்த 2016 முதல் 2021 வரை வணிக வரித்துறை மற்றும் பதிவுத் துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்த காலக்கட்டத்தில் கே.சி.வீரமணி தனது பதவிக் காலத்தில் தனது பெயரிலும், தனது தாய் சி.மணியம்மாள் பெயரிலும் அளவுக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளார். கடந்த 2016 தேர்தலின் போதும், 2021 தேர்தலின்போதும்  கே.சி.வீரமணி தனது வேட்பு மனுவில் தனது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஏப்ரல் 1 முதல் 2021 மார்ச் 31க்கு முன்பு கே.சி.வீரமணி மற்றும் அவரின் உறவினர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களின் சொத்துக்கள், வங்கிகளில் உள்ள ரொக்க இருப்பு, கையிருப்பு, நகைகள், வணிக நிறுவனங்களில் முதலீடுகள், வாகனங்கள், விவசாய நிலங்கள், வீடுகள் ஆகியவற்றின் மதிப்பு ரூ.25 கோடியே 99 லட்சத்து 11,727 ஆகும். 2021 மார்ச் 31வரை அதாவது குற்றம் வரையறுக்கப்பட்ட காலத்தின் முடிவில் அவரது சொத்துக்களின் மதிப்பு ரூ.56 கோடியே 60 லட்சத்து 86,585 ஆகும். குற்றம் நிகழ்ந்த காலமான 2016 ஏப்ரல் 1 முதல் 2021 மார்ச் 31வரை அவரது அமைச்சர் பதவிக்கான சம்பளம், வங்கி முதலீடு வட்டி, வியாபாரத்திலிருந்து வந்த வருமானம், முதலீட்டு லாபம் ஆகியவை மூலம் ரூ.4 கோடியே 39 லட்சத்து 89,907 ஆகும். கே.சி.வீரமணி மற்றும் அவரை சார்ந்தவர்கள் சார்பில் வருமான வரி செலுத்துதல், கடன் தொகை செலுத்துதல் ஆகியவை மூலம் ரூ.2 கோடியே 56 லட்சத்து 28,807 செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கணக்கீடுகளின்படி 2016 முதல் 2021 வரை கே.சி.வீரமணியிடம் ரொக்கம் கையிருப்பு, வங்கி முதலீடுகள், அசையா சொத்துக்கள் வாங்கியது, கல்யாண மண்டபம் கட்டியது, ஓட்டல்களில் முதலீடு செய்தது என அவரின் சொத்துக்கள் ரூ.30 கோடியே 61 லட்சத்து 74,858 என கணக்கிடப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் ேக.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் ரூ.1 கோடியே 83 லட்சத்து 61,100 சேமிப்பு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வருமானம், செலவுகள், சேமிப்புகள் ஆகியவற்றை கணக்கிட்டால் கே.சி.வீரமணி 2016 முதல் 2021 வரையில் வணிக வரித்துறை மற்றும் பதிவுத் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.28 கோடியே 78 லட்சத்து 13,758 சொத்து சேர்த்துள்ளது தெரியவருகிறது. 2016 முதல் 2021 வரை தனது சேமிப்பு தொகை ரூ.1 கோடியே 83 லட்சத்து 61,100 என்று கே.சி.வீரமணி தெரிவித்துள்ள நிலையில் 2016 முதல் 2021 வரை அவரது சொத்து மதிப்பு ரூ.28 கோடியே 78 லட்சத்து 13,758 ஆக உயர்ந்துள்ளது. அதாவது தனது வருமானத்தை காட்டிலும் 654 மடங்கு கூடுதல் சொத்துக்களை சேர்த்துள்ளார்.

வணிக வரித்துறை மற்றும் பதிவுத் துறை அமைச்சராக 2016 முதல் 2021 வரை பதவி வகித்த காலக்கட்டத்தில் கே.சி.வீரமணி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமாக சொத்து சேர்த்துள்ளார். இதன் மூலம் அவர் குற்றம் செய்திருப்பது தெரியவருகிறது. இதன் அடிப்படையில் கே.சி.வீரமணி மீது ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 13(2) (1) மற்றும் 13(1) (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையின் (எப்ஐஆர்) அசல் ஆவணம் வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எப்ஐஆர் நகல் ஊழல் தடுப்பு பிரிவு வேலூர் சரக எஸ்பிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. மாஜி அமைச்சர் வீரமணி கடந்த 5 ஆண்டுகளில் 654 சதவீதம் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளது தெரியவந்துள்ளது.

Tags : Former Minister ,Veeramani , Former Minister Veeramani 654 per cent amassing wealth: Anti-corruption police information in the first information report
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...