15 வயது சிறுமியை திருமணம் செய்து துன்புறுத்திய வழக்கில் ராணுவ வீரருக்கு 22 ஆண்டுகள் சிறை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி..!!

மதுரை: போக்சோ வழக்கில் ராணுவ வீரருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழத்தில் சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த மாவட்டங்களில் வசித்து வரும் பழங்குடி மக்கள் வாழ்விட பகுதிகளான 71 இடங்களில் இந்த திருமணங்கள் நடந்துள்ளதாகவும் தெரிகிறது. கடந்த 2020 மே மாதத்தில் தமிழகத்தில் 318 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. 2020 மே மாத புள்ளி விவரங்களின் படி சேலத்தில் 98 திருமணங்களும், தர்மபுரியில் 192 திருமணங்களும் நடந்துள்ளன.

இந்நிலையில், 15 வயது சிறுமியை திருமணம் செய்து துன்புறுத்திய வழக்கில் ராணுவ வீரருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள சீப்பாளகோட்டையை சேர்ந்த ராணுவ வீரரான பிரபு என்பவர் கடந்த 2013ம் ஆண்டு, தனது உறவினர் மகளான 15 வயது சிறுமியை திருமணம் செய்தார். பின்னர், சிறுமியை ராணுவ குடியிருப்பில் அவர் அடைத்து வைத்தார். கடந்த 2015ம் ஆண்டு அங்கிருந்து மதுரைக்கு தப்பியோடி வந்த சிறுமி, ராணுவ வீரரான பிரபு தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து துன்புறுத்தியதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, பிரபு மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழும், குழந்தை திருமணத்திற்கு உதவியாக இருந்ததாக பிரபுவின் தாயார் கருப்பம்மாள், சிறுமியின் தந்தை பெத்தணசாமி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதால் ராணுவ வீரரான பிரபுவிற்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

குழந்தை திருமணத்திற்கு உதவியாக இருந்த குற்றத்திற்காக பிரபுவின் தாயார் கருப்பம்மாள் மற்றும் சிறுமியின் தந்தை பெத்தணசாமி ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிரபு சார்பில் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சிறுமி, கடந்த சில வருடங்களுக்கு முன், உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>