×

ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருகிறதா பெட்ரோல்,டீசல்? : நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒன்றிய அரசு பரிசீலனை!!

டெல்லி : பெட்ரோல், டீசல் மீதான வரியை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து நாளை நடைபெறும் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட சில பொருட்கள் மட்டும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படாமல் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு அன்றாடம் உயர்ந்து வரும் நிலையில், அதனை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவ்வாறு செய்தால் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு இருந்தாலும் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும்.

இதனிடையே ஜிஎஸ்டி கவுன்சில் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றமும் அண்மையில் அறிவுறுத்தியது. இந்த நிலையில் லக்னோவில் நாளை நடைபெறும் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசப்படும் உள்ளதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டியில் 5,12,18,28% என 4 விதமான வரிகள் மட்டுமே விதிக்கப்படும் நிலையில், பெட்ரோல், டீசலுக்கு எவ்வளவு வரி விதிக்கலாம் என்றும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்புகளை ஈடுகட்டுவது குறித்து மாநில அரசுகள் வாதங்களை வைக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags : GST ,Council , ஜிஎஸ்டி கவுன்சில்
× RELATED கிளாம்பாக்கம் ரயில் நிலையம்-பேருந்து...