ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அம்மன் கோயிலில் விநோத திருவிழா!: பேண்ட், சட்டை போல் சாக்கு அணிந்து வழிபாடு..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அம்மன் கோயிலில் பக்தர்கள் சாக்கு வேடம் அணிந்து நூதன முறையில் நேர்த்திக்கடனை செலுத்தினர். கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள அடகுவல்லி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 5ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய இத்திருவிழாவின் நிறைவு நாளில் நேற்று முளைப்பாரி எடுக்கும் விழா நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். கோரிக்கை வைத்து நிறைவேறிய பக்தர்கள் விநோத முறையில் சாக்கு வேடம் அணிந்து மேளதாளங்களுடன் கிராமத்தை சுற்றிவந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்வாறு சாக்கு அணிந்து வந்து வழிபாடு செய்து வந்தால் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் தீய சக்திகளிடம் இருந்து அடகுவல்லி அம்மன் காப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

நேர்த்திக்கடன் செய்து முடித்தபின் அடகுவல்லி அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடும் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த வினோதமான வழிபாட்டை காண கமுதி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் செங்கப்படை கிராமத்திற்கு திரண்டு வந்துள்ளனர்.

Related Stories:

More