×

தமிழ்நாட்டை பின்பற்றுக!: ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற கர்நாடக சட்டமன்றத்தில் சித்தராமையா கோரிக்கை..!!

பெங்களூரு: தமிழ்நாடு சட்டமன்றத்தை போலவே கர்நாடகத்திலும் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியுள்ளார். கர்நாடக சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அங்கு சிறப்பு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்த சித்தராமையா, சி.ஏ.ஏ., வேளாண் சட்டங்கள், தேசிய கல்வி கொள்கை ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும். எரிபொருள் விலை குறைப்பு என 13 கோரிக்கைகளை வலியுறுத்தினார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மேற்கோள்காட்டிய சித்தராமையா, தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து கர்நாடக சட்டமன்றத்தில் சித்தராமையா பேசியதாவது, விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர கலால் வரியை குறைக்கும் அதிகாரம் மாநிலத்திற்கு இல்லை. அதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மாநில அரசு செஸ் மற்றும் இதர விற்பனை வரியை குறைக்கலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெட்ரோல் மீதான வரியை குறைத்துள்ளார். அதேபோல நீங்களும் குறையுங்கள், தமிழ்நாட்டை ஒப்பிடும் போது அதிகமாக குறைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். சித்தராமையா கொண்டுவந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று பதிலளித்து பேசவுள்ளார். தமிழ்நாட்டை பின்பற்றி அங்கும் பெட்ரோல் விலை குறைக்கப்படுமா? என மாநில மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Tags : Tamil Nadu ,Chidramaiah ,Karnataka Legislative Assembly ,Union Government , Union Government, Resolution, Karnataka Legislative Assembly, Chidramaiah
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...