உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த மாநில போலீசார் வேண்டாம் துணை ராணுவம் வேண்டும்: மாநில தேர்தல் ஆணையருக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவது தங்கள் ஆணையத்தின் முக்கியப் பணியாகும். எப்படியாக வென்றாக வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள், தங்கள் அதிகாரத்தை துஷ்பிரேயோகம் செய்ய வாய்ப்பு உள்ளது. அதனால் வாக்குகளுக்காக கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி பிரசாரத்தில் ஈடுபடுவது, அதிமுகவினரை அச்சுறுத்தல் போன்ற செயல்கள் நடைபெறலாம்.

எனவே உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த தேவையில்லை. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகதான் தேர்தல் நடந்தது. எனவே புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும், அதுவும் ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டும் நடத்தும் தேர்தலை 2 கட்டமாக நடத்துவது சட்ட விரோத செயல்களுக்கு வழி வகுக்கும். அவற்றை தடுக்க நடுநிலையான தேர்தல் பார்வையாளர்களை கொண்டு தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் பார்வையாளர்களாக மாநில அரசில் பணியாற்றுபவர்களை நியமிக்க கூடாது.

அவர்களால் நேர்மையாக செயல்பட முடியாது. மத்திய அரசில் பணியாற்றுபவர்களை தான் நியமனம் செய்ய வேண்டும். அதுதான் தேர்தலை நேர்மையாக நடத்த வழிவகுக்கும். வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மத்திய அரசின் சிஐஎஸ்எப் அல்லது சிஆர்பிஎப் என துணை ராணுவப் படைகள் மூலம் பாதுகாப்பு அளிக்கவேண்டும். தேர்தல் பணிகளுக்கும் மாநில காவல்துறையினரை பயன்படுத்துவதை விட துணை ராணுவப்படையினரை பயன்படுத்துவது நல்லது.

Related Stories:

>