×

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கண்காணிக்க 200 குழுக்கள் அமைப்பு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதை கண்காணிக்க 200 குழுக்களை அமைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முகக்கவசம் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் அரசு  முதன்மைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் நேற்று ரிப்பன் கட்டடத்தில் நடந்தது.

இதில் கூடுதல் காவல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), செந்தில் குமார்  (வடக்கு), துணை ஆணையர்கள் மனிஷ், விஷூ மஹாஜன், சினேகா, சிம்ரன்ஜீத் சிங்  காஹ்லோன், ஷரண்யா அரி, வருவாய் கோட்டாட்சியர்கள் பரமேஸ்வரி, முத்து மாதவன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் கடைபிடிக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறையுடன் இணைந்து மாநகராட்சியின் சார்பில் வார்டுக்கு ஒரு குழு என 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

ஒவ்வொரு குழுவிலும் மாநகராட்சியைச் சார்ந்த 5 பேரும், காவல்துறையைச் சார்ந்த ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சென்னை முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 400 கண்காணிப்பு கேமராக்களின் மூலம் பொதுமக்கள் அதிகளவு கூடியுள்ள இடங்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அந்த இடங்களில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags : Chennai Corporation , Organization of 200 teams to monitor corona security measures: Chennai Corporation action
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...