க்ரைம் நியூஸ்

10 பைக் பறிமுதல்: கோயம்பேடு பகுதியில் நெற்குன்றம் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையின்போது, பைக்கில் வந்த 2 பேரை பிடித்தனர். விசாரணையில், கோயம்பேடு யோகேஷ் (20) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், 50க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடி விற்று ஜாலியாக இருந்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

சிறுமிகள் மீட்பு: வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 8 மற்றும் 6ம் வகுப்பு மாணவிகள் நேற்று முன்தினம் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. புகாரின்படி, வில்லிவாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து, சிறுமிகளில் ஒருவரின் செல்போன் டவரை வைத்து, உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் சுற்றிய இருவரையும் மீட்டு நேற்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

6 இளம்பெண்கள் மீட்பு: அமைந்தகரை, கோவிந்தன் சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 பெண்களை அண்ணா நகர் மகளிர போலீசார் மீட்டனர். வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அசோக் (34) என்ற மசாஜ் சென்டர் நிர்வாகியை கைது செய்தனர். மூன்று பெண்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். மேலும் 3 பெண்களை மயிலாப்பூர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கத்தியுடன் சுற்றியவர் கைது: திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் கத்தி மற்றும் தூக்க மாத்திரைகளுடன் சுற்றித்திரிந்த ஈஞ்சம்பாக்கம் பகுதியைச்  சேர்ந்த கவுதம் (21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், தனது 16 வயது மகளுக்கு தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த நரேஷ் (எ) நரேந்திரன் (21) என்ற வாலிபர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நரேந்திரனை நேற்று முன்தினம் போக்சோவில் கைது செய்தனர்.

பைக் திருடர்கள் சிக்கினர்: எம்பிகே நகர் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு  வியாசர்பாடி சர்மா நகர் மெயின் ரோடு பகுதியில் நின்ற இருவரை மடக்கினர். விசாரணையில், கொடுங்கையூர் 2வது பிளாக் பகுதியை சேர்ந்த சுனில்குமார் (20), திருவள்ளுவர் நகர் துரைமுருகன் (எ) வசந்த் (23) என்பதும், பைக் திருடர்கள் என்பதும் தெரிய வந்தது.

Related Stories:

>