தமிழகத்தில் நீட்டை ரத்து செய்யும் நிலையை ஏற்படுத்துவோம் மாணவ செல்வங்கள் தயவு செய்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வு பற்றிய பதிவு மற்றும் காணொலிக் காட்சி வாயிலாக மாணவ செல்வங்களுக்கு நேற்று வெளியிட்டுள்ள வேண்டுகோள்: 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவி அனிதா இறந்தபோது, என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். சனிக்கிழமை சேலத்தை சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்டபோதே, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்று மாணவ செல்வங்களை கேட்டுக்கொண்டேன்.

மருத்துவம் படிக்க வேண்டும் - டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் கனவை சிதைகக் கூடியதாக நீட் தேர்வு முறை இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு, இதில் இருந்து விலக்களிக்க இன்னும் இறங்கி வராமல் கல்நெஞ்சோடு இருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி மசோதாவை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் தாக்கல் செய்தேன். அனைத்துக்கட்சிகளும் ஒருமனதாக இதனை நிறைவேற்றி இருக்கிறோம். 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கருத்தை,பல்வேறு மாநில அரசுகளின் கவனத்திற்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். இறுதியாக நீட் தேர்வை ரத்து செய்யும் நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம். இந்த சூழலில் மருத்துவம் படிக்க முடியவில்லையே - நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கம் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் செய்தி என் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுவதாக இருக்கிறது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் சொல்வதற்காக அரசு சார்பில் 104 என்ற தொலைபேசி எண்ணை உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.

மாணவ - மாணவிகளுக்கு ஆலோசனை சொல்வதற்காக மனநல மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். தயவு செய்து - தயவு செய்து - மாணவ செல்வங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். வாழ்ந்து போராடுவோம், வாழ்ந்து வென்று காட்டுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>