×

உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: மாநில தேர்தல் ஆணையரிடம் பாமக வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணி மாநில தேர்தல் ஆணையரிடம், அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு குறைந்தது 10 நாட்களுக்குப் பிறகு வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் வகையில் தேர்தல் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தால் தான் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்ய போதிய கால அவகாசம் கிடைக்கும். ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 மணி நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, 76.59 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை இரு கட்டங்களாக நடத்துவது நியாயமற்றது. இதைவிட சுமார் 10 மடங்கு அதிக வாக்காளர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் ஒரே கட்டமாகத் தான் நடத்தப்பட்டுள்ளன. இரு தேர்தல்களும் ஒன்றாக நடத்தப்பட்டபோதும் கூட வாக்குப்பதிவு ஒரே கட்டமாகத் தான் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், தலா 50 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளைக் கொண்ட 140 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான தேர்தலை முதல் கட்டமாக 78 இடங்கள், 2ம் கட்டமாக 62 இடங்கள் என்றும், 1381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான தேர்தலை முதல் கட்டமாக 755 இடங்கள், 2ம் கட்டமாக 626 இடங்கள் என்றும் பிரித்து நடத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.

உள்ளாட்சித் தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதற்கும் தான் வழி வகுக்கும் என்பதை ஆணையம் உணர வேண்டும். ஊரக உள்ளாட்சிகள் தான் இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பு. எனவே. உள்ளாட்சித் தேர்தல்கள் மிகவும் நியாயமாக நடைபெற வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த ஆணையிட வேண்டும்.

Tags : Pamaka , Local elections should be held in a single phase: Pamaka urges the state election commissioner
× RELATED சொல்லிட்டாங்க…