தீர்ப்பாயங்களின் காலி பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசுக்கு இறுதி கெடு: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘காலியாக உள்ள தீர்ப்பாய பணியிடங்களை 2 வாரங்களில் நிரப்ப வேண்டும். இல்லை என்றால், நாங்களே அதை நிரப்பும் உத்தரவை பிறப்பிக்க நேரிடும்,’ என்று ஒன்றிய அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயத்தின் தலைவர், உறுப்பினர்களை நியமிக்கும் விவகாரத்தில் சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பல்வேறு தீர்ப்பாயங்களில் காலியாக இருக்கும் இடங்களை உடனடியாக நியமிக்கும்படி இரு மாதங்களுக்கு முன் ஒன்றிய அரக்கு உத்தரவிட்டது. பின்னர், அடுத்தடுத்து பலமுறை அவகாசம் அளிக்கப்பட்டும், இப்பதவிகளை ஒன்றிய அரசு நிரப்பவில்லை.

கடந்த 5ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘உச்ச நீதிமன்றத்தின் மீது ஒன்றிய அரசுக்கு மரியாதையே இல்லை. நாங்கள் வழங்கும் தீர்ப்பையும் மதிப்பதில்லை. தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், அவற்றை கலைத்து விட்டு மூடி விடுங்கள்,’ என ஒன்றிய அரசுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டது.  இதைத் தொடர்ந்து, 2 தீர்ப்பாயங்களில் ஒரு சில பணியிடங்களை மட்டுமே ஒன்றிய அரசு சில தினங்களுக்கு முன் நிரப்பியது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘கடந்த 2020ம் ஆண்டு முதல் தற்போது வரை நாடு முழுவதும் உள்ள 84 தீர்ப்பாயங்களில் தலைவர்கள், உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பான எந்த பரிந்துரைகளும் ஒன்றிய அரசிடம் நிலுவையில் இல்லை,’ என தெரிவித்தார். இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து தலைமை நீதிபதி ரமணா கூறியதாவது: இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான பரிந்துரைகள் நிலுவையில் இருக்கிறதா?, இல்லையா? என்பது எங்களின் கேள்வி கிடையாது.

காலி பணியிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை? என்பதுதான் எங்களின் கேள்வி. குறிப்பாக, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், வருமான வரி தீர்ப்பாயம் ஆகியவற்றில் தேர்வுக்குழு வழங்கிய பரிந்துரையின் பெயர்களில் ஒரு சிலரை மட்டுமே ஒன்றிய அரசு நியமித்துள்ளது. அது போன்று செய்வதை ஏற்க முடியாது. ஏனெனில், அந்த தேர்வு குழுவில் நானும் இருக்கிறேன். அந்த பரிந்துரை நிறைவேற்றப்படாமல் இருப்பதால்தான் தற்போது வரை காலி பணியிடங்கள் உள்ளன. ஜனநாயகத்தில் சட்டத்தை மதிக்க வேண்டிய  கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது. தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்கள்  நிரப்பப்படாமல் இருப்பது பொதுமக்களுக்கு பாதிப்பை  எற்படுத்தும்.

நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க ஒன்றிய அரசு விரும்புகிறதா என்பது தெரியவில்லை. இதுபோன்ற செயல்பாடுகள் பாராட்டத்தக்க ஒன்றும் கிடையாது. அதனால், தீர்ப்பாயங்களில் இருக்கும் காலி இடங்களை நிரப்ப ஒன்றிய அரசுக்கு இறுதியாக 2 வாரங்கள் அவகாசம் வழங்குகிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ அல்லது இல்லை என்றாலோ அதற்கான காரணத்தை குறிப்பிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால், நாங்களே அந்த பதவிகளை நிரப்புவதற்கான உத்தரவை பிறப்பிக்க நேரிடும். இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.  பின்னர், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Related Stories:

>