×

அதிமுக, அமமுக கூட்டணியில் இருந்து பாமக, தேமுதிக விலகல்: தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக கூட்டணியில்  இருந்து பாமக வெளியேறி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதேபோல அமமுக கூட்டணியில் இருந்து தேமுதிகவும் வெளியேறி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல்  நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்  தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாமக நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்  கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலையில்  இணைய வழியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 அக்கூட்டத்தில், கட்சியின்  வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள்  தெரிவித்தனர். அதனடிப்படையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக  தனித்துப் போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை பாமக  நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ஆகியோரின்  ஒப்புதலுடன் பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார். இதையடுத்து ஒன்பது  மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து  விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணைப்  பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வார்கள்.

விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தி  வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்கள் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு  வெளியிட்டு இருந்தார். மேலும் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில்  கலந்து கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மற்றும் கட்சியின் தலைமை  நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணை பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட  நிர்வாகிகள் என 22 பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பல்வேறு தகவல்கள்  வெளியாகியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில்  தொடரலாமா, வேண்டாமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக  கூறப்படுகிறது.

மேலும், 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வடமாவட்டங்களில்  வருவதால் பாமகவிற்கு செல்வாக்கு உள்ள பகுதிகள் என்பதால் தனித்து  போட்டியிடலாம். மேலும், கடந்த தேர்தலின்போது அதிமுகவினர் ஒத்துழைப்பு  தரவில்லை என விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளதாக  கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்ததாக தெரிகிறது.  அதைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, கடந்த 28  மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கடலூர், திருவண்ணாமலையில்  செல்வாக்கான பகுதிகளில் போட்டியிட்டபோது அதிமுகவினர் சீட் கிடைக்காதவர்கள்  சுயேச்சையாக போட்டியிட்டனர்.

அவர்களை வாபஸ் பெற வைக்க அப்போது முதல்வராக  இருந்த எடப்பாடி பழனிசாமியால் முடியவில்லை, சொந்தக் கட்சிக்காரர்களை கூட  கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களுடன் தற்போது கூட்டணி வைத்தால் நாம்  வெற்றி பெறமுடியுமா. தற்போது உள்ள சூழ்நிலையில் அவர்களுடன் கூட்டணி  வைத்தால் நமக்கு சரி வராது, குறிப்பிட்ட சீட் கிடைக்காது. அதனால் தனித்தே  போட்டியிடலாம். உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று குறிப்பிட்ட இடங்களில்  வென்று பாமக வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம். பாமகவால் கூட்டணிக் கட்சிகள்  பலனடைந்தது. கூட்டணியால் பாமகவுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. கடந்த  தேர்தலில் அதிமுக கூட்டணி தர்மத்தை காப்பாற்றவில்லை என்று அவர் கூறியதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பாமக  தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் 9 மாவட்டங்களில் தனித்தே போட்டியிடலாம் என்ற  அறிவிப்பை பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்றுமுன் தினம் வெளியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தேமுதிகவும் தனித்துப்போட்டி: இந்த நிலையில், அமமுக கூட்டணியில் இருந்து விலகி தேமுதிகவும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோதும் தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.

இதனால், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி முறிவு ஏற்பட்ட நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தங்களை அழைத்து பேசும் என காத்திருந்தது. உரிய மரியாதை கிடைக்காததால் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக, அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. ஆனாலும், தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார். தேமுதிக தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருவதற்கு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட   விஜயகாந்த்தின் தலையீடு கட்சியில் இல்லாமல் இருப்பது என தொண்டர்கள் முடிவு  செய்தனர்.

இந்நிலையில், துபாயில் பேச்சு பயிற்சிக்காக சென்றிருந்த விஜயகாந்த், சிகிச்சை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இதனால் தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் நேரடியாக தலையிடுவார்   என்றும், அதனால் கட்சி வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையில் தொண்டர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், விஜயகாந்த் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல.  எனவே, வரும் உள்ளாட்சி தேர்தலில், அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களிலும் தேமுதிக பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம்’’ என கூறியிருந்தார்.

இந்நிலையில், அமமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, உள்ளாட்சி தேர்தலில் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் தேமுதிக தனித்து   போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பால் அமமுக கூட்டணியும் முறிந்தது. ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிய நிலையில், தற்போது அமமுக கூட்டணியில் இருந்து தேமுதிகவும்   வெளியேறி உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெற இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக   தனித்து போட்டியிடுகிறது.

போட்டியிட விரும்புகின்ற அனைத்து  நிர்வாகிகளும்,  தொண்டர்களும், ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை  இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் காலை 10 மணியில் இருந்து அந்தந்த  மாவட்ட தலைமை  அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.  ஊரக உள்ளாட்சி  தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப  மனு அளிப்பதற்கு  தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின்  அடிப்படை  உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள். மாவட்ட ஊராட்சி  குழு  உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ரூ.4,000, ஊராட்சி ஒன்றிய குழு  உறுப்பினர்  பதவிக்கு ரூ.2,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆளும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் ஒற்றுமையாக ஒரே அணியாக போட்டியிடும் நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான பாமக வெளியேறியதும், அமமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலின்போது அதிமுகவில் சீட் கிடைக்காதவர்கள்  சுயேச்சையாக போட்டியிட்டனர். அவர்களை வாபஸ் பெற  வைக்க அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியால் முடியவில்லை, சொந்தக் கட்சிக்காரர்களை கூட கட்டுப்படுத்த முடியவில்லை.

அவர்களுடன் தற்போது கூட்டணி வைத்தால் நாம்  வெற்றி பெறமுடியுமா. தற்போது உள்ள சூழ்நிலையில் அவர்களுடன் கூட்டணி வைத்தால் நமக்கு சரி வராது, குறிப்பிட்ட சீட் கிடைக்காது. அதனால் தனித்தே போட்டியிடலாம். உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று குறிப்பிட்ட இடங்களில் வென்று பாமக வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம்.

‘‘வேணும்னா போட்டுக்கலாம்... இல்லைனா கழற்றிக்கலாம்’’ -செல்லூர் ராஜூ
மதுரையில்  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டி: ‘‘கூட்டணி என்பது  தோளில் போடும் துண்டு மாதிரி. துண்டை தேவையென்றால் தோளில் போட்டு  கொள்ளலாம். தேவையில்லை என்றால் கழற்றி வைத்துக் கொள்ளலாம். அதிமுக எந்தவொரு  காலகட்டத்திலும் கூட்டணியை நம்பி இருந்தது இல்லை. தொண்டர்களை நம்பியே  உள்ளது. கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தான் எடுபடும்.  உள்ளாட்சி தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கை  பொறுத்து அமையும். எனவே பாமக தனித்து போட்டியிடுவதால் எந்த வருத்தமும்  இல்லை என்றார்.

யாரை நம்பியும் நாங்கள் இல்லை -சி.வி.சண்முகம்
விழுப்புரத்தில்  நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்  பேசும்போது, ‘‘இந்த தேர்தலில், செலவு செய்யும் தகுதியான வேட்பாளர்களை நிறுத்த  வேண்டும். கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து அறிவிப்பு வந்தாலும், யார்  வேட்பாளர்கள் என்பதை ஏற்கனவே நிர்வாகிகள் முடிவு செய்து வைத்திருப்பீர்கள்.  அவர்கள், வேட்புமனு தாக்கலுக்கான பணிகளை துவங்க வேண்டும். நம்மை நம்பிதான்  நாம் இருக்கிறோம். தொண்டர்களை நம்பிதான், பல வெற்றிகளை கண்டுள்ளது.  மற்றவர்களை நம்பி இந்த மாபெரும் இயக்கம் இருந்தது கிடையாது’’ என்றார்.

Tags : Phamaga ,Extrade-Amamana Alliance , AIADMK, AIADMK withdraw from alliance, Temujin: Announcement of standing alone
× RELATED அதிமுக கூட்டணியில் இருந்து பாமக...