இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி தினமும் 77 பலாத்காரம்: தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த ஆண்டில் தினமும் 77 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 28 ஆயிரத்து 46 பலாத்கார வழக்குகள் வந்துள்ளதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நாட்டின் குற்ற வழக்குகள் தொடர்பாக தேசிய தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிடும். அந்த வகையில், கடந்த 2020ம் ஆண்டுக்கான குற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* கடந்த 2020ல் நாடு முழுவதும் மொத்தம் 28,046 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 28 ஆயிரத்து 153 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி 77 பலாத்கார வழக்கு என்ற வீதத்தில் பதிவாகி உள்ளது.

* இதில் பாதிக்கப்பட்டவர்களில் 25,498 பேர் 18 வயதை தாண்டியவர்கள், 2,655 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள், சிறுமிகள் ஆவர்.

* அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 5,310 வழக்குகள் பதிவாகி உள்ளன. உத்தரப் பிரதேசம் (2,769), மத்திய பிரதேசம் (2,339), மகாராஷ்டிரா (2,061) மற்றும் அசாம் (1,657) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குறைந்தபட்சமாக டெல்லியில் 997 வழக்குகள் பதிவாகி உள்ளன.

* கணவர் மற்றும் புகுந்த வீட்டாரால் கொடுமைப்படுத்தப்பட்ட வழக்குகள் மட்டுமே 1 லட்சத்து 11 ஆயிரத்து 549 ஆகும்.

* பலாத்காரம் தவிர, பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, தாக்குதல் பிரிவில் 85,392 வழக்கும், பலாத்கார முயற்சி என 3,741 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 105 வழக்குகள் வெளிநாடுகளில் தாக்கப்பட்டது தொடர்பானது.

* பெண் கடத்தல் மற்றும் அடைத்து வைத்து சித்ரவதை செய்தல் வழக்குகள் 62,300 ஆகும்.

* வரதட்சணையால் இறந்ததாக 6,966 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், 7,045 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* ஊரடங்கு நேரத்திலும் நடந்த அட்டூழியங்கள்

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதிலும், பலாத்கார அட்டூழியங்கள் நடந்துள்ளன. அதே சமயம், இந்த ஊரடங்கால் முந்தைய ஆண்டை விட குற்றங்கள் சற்று குறைந்துள்ளன. பெண்களுக்கு எதிராக 2020ம் ஆண்டில் மொத்தம் 3 லட்சத்து 71 ஆயிரத்து 503 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதுவே கடந்த 2019ம் ஆண்டில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 326 வழக்கும், 2018ல் 3 லட்சத்து 78 ஆயிரத்து 236 வழக்கும் பதிவாகி உள்ளன. பலாத்கார வழக்குகள் 2020ஐ விட 2019ல் அதிகமாக 32,033 ஆகவும், 2018ல் 33,356 ஆகவும், 2017ல் 32,559 ஆகவும் பதிவாகி உள்ளன.

29,193 பேர் குத்திக் கொலை

* கடந்த ஆண்டில் 29,193 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இது, கடந்த 2019ஐ விட 1 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019ல் 28,915 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

* மொத்தம் 88,590 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இதில், 14,869 பேர் ஆண்கள், 73,721 பேர் பெண்கள். 56,591 பேர் சிறார்கள் ஆவர். இதில் 47,876 பேர் சிறுமிகள்.

* குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என 1 லட்சத்து 28 ஆயரித்து 531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2019ஐ காட்டிலும் (1 லட்சத்து 48 ஆயிரத்து 90) குறைவாகும்.

* குற்றங்களின் விகிதம் 2019ல் 7.2 சதவீதமாக இருந்த நிலையில் 2020ல் 6.7 சதவீதமாக சரிந்துள்ளது.

Related Stories:

>