×

ஷ்ரேயாஸ் வருகை டெல்லிக்கு பெரிய பலம்: பயிற்சியாளர் கைப் உற்சாகம்

துபாய்: காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஷ்ரேயாஸ் அய்யர், முழு உடல்தகுதியுடன் மீண்டும் அணியில் இணைந்திருப்பது  டெல்லிஅணிக்கு பெரிய பலம் என்று  உதவி பயிற்சியாளர் முகமது கைப் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 2018ம் ஆண்டு முதல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் ஷ்ரேயாஸ் அய்யர்.   கடந்த ஆண்டு டெல்லி அணியை முதல்முறையாக இறுதி ஆட்டம் வரை அழைத்துச் சென்றார். இந்த ஆண்டு தொடக்கத்தில்  இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது இடது தோள் பட்டையில் காயம்  ஏற்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் காயம் காரணமாக இடையிலேயே விலக நேரிட்டது. இதைத் தொடர்ந்து, டெல்லி  அணியின் கேப்டனாக ரிஷப் பன்ட் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில்,  கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர்  மே மாதம் இடைநிறுத்தப்பட்டது.  எஞ்சிய ஆட்டங்கள் சுமார் 4 மாதங்களுக்கு பிறகு  அமீரகத்தில் ஞாயிறு அன்று தொடங்குகிறது. காயத்தில் இருந்து மீண்ட ஷ்ரேயாஸ் மீண்டும் டெல்லி அணியில் இணைந்துள்ளார். துபாயில் உள்ள அணியினருடன் அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஷ்ரேயாஸ் மீண்டும் அணியில் இணைந்தாலும், ரிஷப் கேப்டனாக தொடர்வார் என்று டெல்லி நிர்வாகம் அறிவித்துவிட்டது. துபாயில் நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் செப்.22ம் தேதி  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை டெல்லி எதிர்கொள்கிறது.

இந்நிலையில் ஷ்ரேயாஸ் மீண்டும் அணியில் இணைந்தது குறித்து முன்னாள் நட்சத்திரமும், டெல்லி அணியின் உதவி பயிற்சியாளருமான முகமது கைப் கூறியதாவது: முதல் பாதி ஆட்டங்கள் நடந்து, பெரிய இடைவெளிக்கு பிறகு ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாட இருக்கிறோம். அதே நேரத்தில் எங்கள் அணியில் உள்ள பெரும்பான்மையான வீரர்கள் தொடர்ந்து சர்வதேச ஆட்டங்களில் விளையாடி உள்ளனர். நன்றாக விளையாடும் சர்வதேச ஆட்டக்காரர்கள், உள்ளூர் ஆட்டக்கார்கள்  சம அளவில் இருக்கின்றனர். முதல் ஆட்டம் நிச்சயம் சவாலாகவே இருக்கும். ஆனால், அதுதான் எங்களின் போக்கை நிர்ணயம் செய்ய உள்ளது.

எஞ்சிய ஆட்டங்களில் ஆட உள்ள ஆடும் அணியில் பெரிய மாற்றம் இருக்காது. ஷ்ரேயாஸ் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது எங்களுக்கு பெரிய பலமாக இருக்கும். அவர் சிறந்த வீரர். கடந்த 2 சீசன்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எஞ்சிய ஆட்டங்களிலும் அவரது ஆட்டத்தை காண  காத்திருக்கிறோம். இந்தியாவில் நடந்த முதல் பாதி தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம்.  அதனை அமீரகத்தில் நடைபெற உள்ள எஞ்சிய ஆட்டங்களிலும் தொடர்வோம். இவ்வாறு கைப் கூறியுள்ளார். இந்தியாவில் நடந்த ஆட்டங்களில் அதிக வெற்றிகளுடன்  டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Shreyas' ,Delhi ,Coach ,Guy , Shreyas' arrival a big strength for Delhi: Coach Guy's enthusiasm
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...