போதை மருந்து கடத்திய 2 பேர் சிக்கினர்: 400 மாத்திரைகள், பைக், ரூ.4 ஆயிரம் பறிமுதல்

புழல்: செங்குன்றம் அருகே பாடியநல்லூர் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு செங்குன்றம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி பைக்கில் வந்த 2 பேரை மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், பைக் பெட்டியை சோதனை செய்தனர். அதில், போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, பைக் மற்றும் 400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த  போலீசார், 2 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அதில், சென்னை சைதாப்பேட்டை, வெங்கடாபுரத்தை சேர்ந்த சந்திரராஜ் (22), ராமநாதபுரம் மாவட்டம் அசாருதீன் (21) என தெரிந்தது. மேலும் விசாரணையில், அவர்கள் ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகள் கடத்தி வந்து, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பலருக்கு சப்ளை செய்கின்றனர் என  தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து, பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் பஜார் பகுதியில் தனியார் ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தனியார் ஏடிஎம் மையம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, ஏடிஎம் மையம் அருகே ஒரு சொகுசு கார் நின்றிருந்தது. அருகே சென்று பார்த்தபோது, ஏடிஎம் மையத்தில் 4 பேர், காஸ் வெல்டிங் மூலமாக மெஷினை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயற்சிப்பது தெரிந்தது. உடனே போலீசார், அவர்களை பிடிக்க முயன்றனர். அவர்கள், போலீசாரை கண்டதும் காரில் ஏறி தப்பினர். அவர்களை போலீசார் விரட்டி சென்றபோது, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று, 7 கண்ணு மேம்பாலம் அருகே காரை நிறுத்திவிட்டு, அவர்கள் இருள் சூழ்ந்த பகுதியில் தப்பிவிட்டனர். இதையடுத்து போலீசார், அந்த காரை பறிமுதல் செய்து, ஆரம்பாக்கம் காவல் நிலையம் சென்றனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏடிஎம் மையம் உள்பட அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, தப்பியோடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>