சடலத்தை வைக்க குளிர்சாதன பெட்டி இல்லை கூலி தொழிலாளியின் உறவினர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்: பொன்னேரி அரசு மருத்துவமனை அவலம்

பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனை பல்வேறு கட்டமைப்புகள், மருத்துவ வசதிகள் உள்ளடக்கி நவீன முறையில் அவசர சிகிச்சை பிரிவுடன் இயங்குகிறது. இங்கு, தினமும் பல்வேறு காரணங்களுக்காக ஏராளமானோர் சிகிச்சை பெறுகின்றனர். அதில் சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் உடல்கள் முறையாக பாதுகாப்பதில்லை. குறிப்பாக சவ கிடங்களில், குளிர்சாதன வசதி இல்லை. சடலம் பாதுகாக்கப்படும் அறையில் குளிர்சாதன பெட்டி இல்லை. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டம், சுண்ணாம்பு குளம், ஓபசமுத்திரத்தை சேர்ந்த ஆறுமுகம்,  கொலை செய்யப்பட்டார். அவரது உடலை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு, போலீசார் நேற்று காலை கொண்டு வந்தனர். அங்கு, குளிர்சாதன பெட்டியில் சடலத்தை வைக்க மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டனர். அதற்கு, குளிர்சாதன பெட்டி பழுதடைந்தது. வேண்டுமானால் நீங்களே தனியாக ஒரு குளிர்சாதன பெட்டி கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பொன்னேரி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இறந்தவர்களை முறையாக அடக்கம் செய்ய கூடாது என மருத்துவமனை நிர்வாகம் பிரேத பரிசோதனை செய்யாமல், சடலங்களை வைத்திருப்பபதாக குற்றஞ்சாட்டினர். தகவலறிந்து பொன்னேரி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசுவதாக உறுதியளித்தனர். இதைதொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், சொந்த ஊர் சென்றனர்.

Related Stories:

More
>