கிங் இன்ஸ்டிடியூட்டில் பாம்பு கடிக்கான மருந்து தயாரிப்பு மையம் ஆய்வு செய்யாமல் ரூ.16.77 கோடியை வீணாக்கிய அதிமுக அரசு: தினகரன் செய்தியை உறுதிப்படுத்திய சிஏஜி அறிக்கை

திருச்சி: கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டை பாம்பு கடிக்கான நஞ்சு முறிவு மருந்து தயாரிப்பதற்கான ஆய்வை 4 ஆண்டுகளாக செய்யாமல் கட்டிடத்தை மட்டும் மாற்றியமைத்த காரணத்தால் ரூ.16.77 கோடி பயனற்ற செலவு என்று சிஏஜி அறிக்கை கூறியுள்ளது. மேலும் இது தொடர்பாக ஏற்கனவே தினகரன் நாளிதழ் வெளியிட்ட செய்தி உறுதிப்படுத்தும் வகையில் சிஏஜி அறிக்கை கூறப்பட்டுள்ளது. சென்னையில் கிண்டியில் உள்ள கிங் நோய்த் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம் 1899ல் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் பல்வேறு நோய்கள் தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட்டது.

சின்னம்மை, காலரா, டெங்கு, சிக்குன்குன்யா, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பெருந் தொற்றுகள் தொடர்பான ஆய்வுகளில் இந்த ஆய்வகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் முதல் கொரோனா ஆய்வகம் கிண்டியில்தான் அமைக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தில் இதுவரை ஆயிரக்கணக்கான சோதனை செய்யப்பட்டது. இதற்கு முன்பாக தமிழக சட்டப்பேரவையில் 2016 - 2017ம் ஆண்டு மானிய கோரிக்கை விவாதத்தின் போது அளிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வுதுறை கொள்கை விளக்க குறிப்பில், கிண்டி கிங் நோய்த் தடுப்பு மருந்து நிலையம் மேம்பாடு தொடர்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதில், ‘‘கிண்டி கிங் நோய்த் தடுப்பு மருந்து நிலையத்தில் தடுப்பு ஊசி மருந்து தயாரித்தலை மீண்டும் தொடங்கவும், திசு வங்கி ஏற்படுத்திடவும், பழைய கட்டிடத்தில் பாம்பு கடிக்கான நஞ்சு முறிவு மருந்து தயாரிக்க ஏதுவாக கட்டிடத்தினை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்காகவும், குளிர்சாதன வசதி ஏற்படுத்திடவும் 16.72 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் இதற்கான ஆய்வு பணிகளை கடந்த அதிமுக அரசு செய்யவில்லை என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவித ஆய்வும் செய்யாமல் ரூ.16.77 கோடியை பயனற்ற வகையில் செலவு செய்து இருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாம்பு கடிக்கு எதிரான மருந்தை 2000ம் ஆண்டு கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதன்பிறகு அதற்கான உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. மேலும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்றால் புதிய உற்பத்தி பிரிவை கட்ட வேண்டும் என்று மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு பரிந்துரை செய்தது. இதன்படி, 2 கட்டிடம் கட்ட பரிந்துரை செய்யப்பட்டது.

நவம்பர் 2013ம் ஆண்டு இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, திட்டப்பணிகள் முடிவுற்றால் சிறப்பான மையமாக இது திகழும். ஓராண்டிற்கான தமிழ்நாட்டின் தேவையை அது நிறைவு செய்யும். அது வரையில் ஆண்டுக்கு 2 லட்சம் குப்பிகள் உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி கட்டிட பணிகள் ரூ.16.77 கோடி செலவில் தொடங்கப்பட்டு 2016ம் ஆண்டு முதல்வர் திறந்து வைத்தார். தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்கம் மற்றும் கிங் நோய் தடுப்பு நிறுவனம் பாம்பு கடிக்கான உற்பத்தியை மீண்டும் துவக்குவதற்கான கருத்துருவை அளிக்கும் போது திட்டத்தின் சாத்தியக்கூறு குறித்து முழுமையாக ஆராய தவறியது என்று தணிக்கையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு ஒரு விரிவான தொழில்நுட்ப மற்றும் நிதி வகையிலான சாத்தியக்கூறு பற்றி ஆய்வு இன்றியும், திட்டத்திற்கு இந்திய அரசின் நிதி பெறுவதற்காக தகுதியை அறிந்து கொள்ளாமலும், தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை துவக்கி உள்ளது. இதன் விளைவாக மருந்து உற்பத்தி மீண்டும் துவக்கப்படாமல் புதிய கட்டிடங்களை கட்டியது மற்றும் பழைய கட்டிடத்தை மாற்றியமைத்தது ஆகியவற்றுக்காக ரூ.16.77 கோடி பயனற்ற வகையில் செலவிடப்பட்டது. இதனால், பாம்பு கடிக்கான மருந்து தேவையை தனியாரிடம் இருந்து அரசு வாங்கி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* ஆய்வு பணிக்கு உத்தரவிட்ட திமுக அரசு

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி அமைத்த பின்பு 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம்தான் பாம்பு கடிக்கான நஞ்சு முறிவு மருந்து தயாரிப்பதற்கான ஆய்வை மேற்கொள்வதற்கான டெண்டர் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலம் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>