80 வயதிற்கு மேற்பட்ட 4,138 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

சென்னை : சென்னை மாநகராட்சியின் சார்பில் 80 வயதிற்கு மேற்பட்ட 4,138 மூத்த குடிமக்களின் இல்லங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். பொதுமக்களை கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்க பல்வேறு விதமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தொற்று பாதிப்புக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், உயர் ரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய், காசநோய் பாதித்த நபர்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போன்ற நபர்களுக்கு தனிக் கவனம் செலுத்தி தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆகஸ்ட் 26ம் தேதியன்று நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் சுமார் 1.35 லட்சம் தடுப்பூசிகளும், 12ம் தேதியன்று நடைபெற்ற 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் சுமார் 1.91 லட்சம் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அந்தந்த பகுதிகளில் நடத்தப்பட்டாலும் மூத்த குடிமக்களின் நலன் கருதி சென்னை மாநகராட்சியின் சார்பில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் 15 வாகனங்கள் ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 13ம் தேதியன்று மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் மாநகராட்சி மருத்துவக் குழுவினரால் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்  4,138 நபர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 2,779 முதல் தவணை தடுப்பூசியும், 1,359 இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சியின் 044-2538 4520 மற்றும் 044-4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாநகராட்சியின் சார்பில் இல்லங்களுக்கு சென்று கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும்.  எனவே  80  வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களின் நலன் கருதி  மாநகராட்சியின் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories:

>