கடனாநதி அணை பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு: குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி?: சாமியார் உள்பட 5 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

கடையம்: கடனாநதி அணை பகுதியில் குழந்தையை நரபலி கொடுக்க முயன்றதாக சாமியார் உள்பட 5 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ளது கடனாநதி அணை. இங்கு நேற்று முன்தினம் இரவு ஒரு சொகுசு கார் சென்றது. இதனை பார்த்த அப்பகுதியில் வயலுக்கு காவல் இருந்த சிலர், பின் தொடர்ந்து சென்றனர். அப்போது காவி உடையணிந்த முதியவர், 2 சிறுமிகள், கைக்குழந்தையுடன் ஒரு இளம்பெண் மற்றும் ஒரு ஆண் இருந்ததை பார்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் கைக்குழந்தையை தலைகீழாக தூக்கி பிடித்தபடி காவி உடையணிந்த முதியவர் ஊதுபத்தி காட்டி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். குழந்தையை நரபலி கொடுக்க முயல்வதாக நினைத்து ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அருகிலுள்ள கிராம மக்களும் திரண்டனர்.

இதையடுத்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விரைந்து வந்து, முதியவர், சிறுமிகள் மற்றும் பெண்ணை அழைத்து செல்ல முயன்றபோது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்டோருக்கு அணை பகுதியில் அனுமதி இல்லாத நிலையில் சாமியார் எப்படி இரவு நேரத்தில் அணைக்கு வந்தார். அதிகாரிகள் துணையுடன் குழந்தையை நரபலி கொடுக்க முயன்றுள்ளார் என்று கூறி அழைத்து செல்ல விடாமல் தடுத்தனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், 5 பேரையும் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் முதியவர் சிவகாசியை சேர்ந்த வாசுதேவன் (பாம்பாட்டி சித்தர்) என்பதும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடனாநதி அணை வனப்பகுதியில் உள்ள அத்ரி கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வதும் தெரிய வந்தது. அவருடன் அவரது மகன் கங்காதரன், அவரது மனைவி கமலாதேவி, மகள்கள் ஹரிவர்ஷினி, ஹேம சுகாஷினி மற்றும் பிறந்து 45 நாட்களான குழந்தை ஆகியோர் இருந்தனர். அத்ரி கோயிலை நோக்கி வழிபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனைவரையும் சிவகாசி போலீசாரிடம், ஆழ்வார்குறிச்சி போலீசார் ஒப்படைத்தனர். இரவு நேரத்தில் குழந்தையை நரபலி கொடுக்க முயன்றதாக சாமியார் உள்பட 5 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Related Stories:

>