ஒன்றிய பாஜ அரசு பெண்களின் நலனுக்கு எதுவும் செய்யவில்லை : திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

திருத்தணி:திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில், நலத்திட்ட உதவிகள்  மற்றும் உயர்மின் கோபுர விளக்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி திருத்தணியில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பிரியதர்ஷினி தலைமை  வகித்தார். நகர பொறுப்பாளர் வினோத்குமார் வரவேற்று பேசினார். மகளிரணி நிர்வாகிகள் சின்னபாப்பா, மஞ்சுளாகுமார், காந்திமதி, வசந்தி, புனிதவதி முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்பி கலந்துகொண்டு திருத்தணி பெரியார் நகரில் உயர்கோபுர மின்விளக்கை திறந்து வைத்தார்.

இதையடுத்து தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கனிமொழி எம்பி பேசியதாவது:இந்தியாவிலேயே  தமிழகத்தில்தான் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர். தொகுதி மக்களின் அடிப்படை பணிகள் செய்து கொள்ள எம்எல்ஏக்களுக்கு தொகுதி மேம்பாடு நிதி 3 கோடி ரூபாய் முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி உள்ளார். ஆனால் ஒன்றிய அரசாங்கம் கொரோனா தொற்று  காரணமாக எம்பிக்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்தி உள்ளது. ஒன்றிய அரசானது பெண்களின் மாநில உரிமைகளை பறித்து வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டம், நீட் தேர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் பெண்களுக்கு கல்வி, சுய உதவி குழுக்கள் உள்ளாட்சியில், 33 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பாஜ அரசு இரண்டு முறை ஆட்சிக்கு வந்தும் இதுவரை பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகம் பெறுவதற்கான சட்டத்தை நிறைவேற்றவிலை. பெண்கள் முன்னேற்றத்துக்காக திமுக தவிர வேற எந்த கட்சியும் செயல்படுத்தவில்லை. தற்போது தமிழக முதல்வர், கிராமப்புற பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார். இதன் காரணமாக ஆண்கள் வீட்டிலிருந்தபடியே பெண்களை வேலைக்கு அனுப்பி வருகின்றனர்.இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, எம்எல்ஏக்கள் எஸ்.சந்திரன், வி.ஜி. ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். செல்வி நன்றி கூறினார்.

Related Stories:

>