மக்களிடம் வரி வாங்கி அரசை ஏமாற்றும் ஜவுளி கடைகள்… ரெய்டு தொடரும் என அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

மதுரை: தனியார் நிறுவனங்கள், மக்கள் கட்டக்கூடிய ஜிஎஸ்டி வரியை அரசுக்குச் செலுத்தாமல் ஏமாற்றுகின்றன என்று வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணனேந்தல் மந்தையம்மன் கோயில் திடல் பகுதியில் ‘‘மக்களைத்தேடி மருத்துவம்’’ திட்டத்தை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மக்களைத்தேடி மருத்துவம்’’ திட்டம் மூலம் மதுரை மாநகராட்சியில் மட்டும் இதுவரை 23 ஆயிரத்து 424 பேருக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டுள்ளது.

முதல்வராக பொறுப்பேற்றதும், சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். தற்போது நீட் தேர்வை எதிர்த்து சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சியினரும் ஆதரிக்கின்றனர். நீட் தேர்வை பாஜவினர் தவிர யாரும் விரும்பவில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். பிளஸ்2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர்களை தேர்வு செய்ய வேண்டுமென்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்.

தமிழக வணிக வரித்துறை வரலாற்றிலே எப்போதும் இல்லாத வகையில் 103 ஜவுளிக் கடைகளில் வணிக வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் மக்களிடம் வரிப் பணத்தை வாங்கிக் கொண்டு அரசுக்குச் செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர்.அந்த புகாரின் அடிப்படையிலேதான் ஜவுளி நிறுவனங்களில் ஆய்வு நடந்தது. இன்னும் 3 நாட்கள் அந்த ஆய்வு நடக்கும். அதன்பிறகு அதற்கான தீர்வை வணிக வரித்துறை முடிவெடுக்கும். தொழில் செய்பவர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியை, நேர்மையாகவும் முறையாகவும் செலுத்த வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.

Related Stories:

More