×

அணி சிறப்பாக செயல்படும் வரை கேப்டன் மாற்றம் இல்லை: பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா பேட்டி

மும்பை:  டி.20 உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணியின் டி.20 மற்றும் ஒருநாள் அணி கேப்டனாக ரோகித்சர்மா நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் பரவியது. விராட் கோஹ்லி டெஸ்ட் அணிக்கான கேப்டனாக மட்டும் தொடர்வார் என கூறப்பட்டது. ஆனால் இதனை பிசிசிஐ மறுத்துள்ளது.  இதுபற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அளித்துள்ள பேட்டியில், களத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் வரை கேப்டன் ஷிப்பில் மாற்றம் பற்றிய கேள்வி எழாது, என்றார். கோஹ்லி தலைமையில் கடைசியாக இந்தியா விளையாடிய டி20 தொடர்களில் இங்கிலாந்துக்கு எதிராக 3-2, ஆஸ்திரேலியா 2-1, இலங்கை 2-0, மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 4-0 என தொடரை கைப்பற்றி உள்ளது. இருப்பினும் ஐசிசி தொடர்களில் கோஹ்லியால் ஒருமுறை கூட கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் உலக கோப்பை டி20 தொடருக்கு இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த ஜெய் ஷா, இந்திய அணியின் வழிகாட்டுதலுக்காக தான் டோனியை அணுகியதாகவும், நீண்ட யோசனைக்கு பின் அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், ‘‘டி20 உலகக்கோப்பைக்கு மட்டுமே இந்திய அணியின் வழிகாட்டியாக இருக்க டோனி ஒப்புக்கொண்டார். பிசிசிஐயின் வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, தேசிய அணிக்கு மீண்டும் பங்களிக்க டோனி ஆர்வமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். டோனி நியமனம் பற்றி நான் கேப்டன் மற்றும் துணை கேப்டன் மற்றும் ரவிசாஸ்திரியிடம் பேசினேன். அனைவரும் ஒருமித்த கருத்தில் இருந்ததால் டோனியை நியமிக்க முடிந்தது’’ என்றார்.

Tags : BCCI ,Jaisha , BCCI
× RELATED ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுகிறார் ரிஷப் பந்த்: பிசிசிஐ தகவல்