நவம்பரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசம் பயணம்: 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது

இஸ்லாமாபாத்: உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் முடிந்த பின்னர் வரும் நவம்பரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வங்கதேசத்திற்கு செல்கிறது. அங்கு வங்கதேச அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பாகிஸ்தான் ஆடுகிறது என்று அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டி20 தொடரின் 3 போட்டிகளும் முறையே நவம்பர் 19, 20 மற்றும் 22ம் தேதிகளில் டாக்காவில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

பின்னர் முதல் டெஸ்ட்  சட்டோகிராம் நகரில் உள்ள மைதானத்தில் நவம்பர் 26ம் தேதி துவங்க உள்ளது. 2வது டெஸ்ட் போட்டி டாக்காவில் டிசம்பர் 4ம் தேதி துவங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் மூலம் வங்கதேச அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கை துவக்க உள்ளது. வெஸ்ட் இண்டீசில் பாக். அணி, டெஸ்ட் தொடரில் ஆடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி என ஏற்கனவே கணக்கை துவக்கி விட்டது. இதுவரை பாகிஸ்தான் அணி, வங்கதேச அணிக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் 12 டி20 போட்டிளில் 10 போட்டிகளில் பாகிஸ்தான் வென்றுள்ளது.

Related Stories: