முறையான அறிவிப்புகள் இல்லாததால் சென்னை புறநகர் ரயில் பயணிகள் கடும் அவதி

சென்னை: மின்சார ரயில்களில் பெட்டிகள் குறைக்கப்பட்டது குறித்து முறையான அறிவிப்புகள் இல்லாததால் சென்னை புறநகர் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, செங்கல்பட்டு- அரக்கோணம் , மூர் மார்க்கெட் - அரக்கோணம், மூர்மார்க்கெட் - கும்மிடிபூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை கடற்கரை செங்கல்பட்டு மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் 12 பெட்டிகளுடன் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று 3 மணிக்கு மேல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு புறப்பட்ட ரயில் எண் பிசி41 என்ற மின்சார ரயிலானது 9 பெட்டிகளுடன் இயங்கியிருக்கிறது.

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள அனைத்து ரயில் நிலைய நடைமேடைகளும் 12 பெட்டிகள் நிறுத்தும் வசதி கொண்டவை. எனவே அனைத்து பயணிகளும் 12 பெட்டிகளுக்கு ஏற்ப வரிசையில் நிற்பது வழக்கம். ஆனால் அந்த வண்டி  ஒன்பது பெட்டிகளுடன் இயங்கியதால் கடைசி மூன்று பெட்டிகளுக்கு காத்திருந்த பயணிகள் அவசர அவசரமாக ரயில் வண்டியின் பின்னால் ஓடிச்சென்று ஏறியதையடுத்து கீழே விழுந்து அடிபடும் நிலை ஏற்பட்டது. மேலும் கடைசி பெட்டியில் இடப்பற்றாக்குறை காரணமாக அதற்கு முன்னால் இருந்த முதல் வகுப்பு பெட்டியில் பாதி பயணிகள் ஏறினார்கள். முதல் வகுப்புப் பெட்டியில் பயணிகள் ஏறுவதை கண்ட டிக்கெட் பரிசோதகர் உடனடியாக அந்த முதல் வகுப்பு பெட்டியில் ஏறிய அனைத்து பயணிகளின் பயணச்சீட்டுகளையும் சோதனை செய்து அபராதம் விதிக்க தொடங்கினார்.

உடனே பெரும்பாலான பயணிகளுக்கும் டிக்கெட் பரிசோதகருக்கும் இடையே ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இது குறித்து கிண்டி ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே அதிகாரிகளுடன் முறையிட்டபோது இந்த 9 பெட்டி ரயில் எப்போது வரும் என்று எங்களுக்கும் தெரியாது. இது ஒரு வட்டச் சுற்று ரயில் ஆகும் என்று கூறினர்.  சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் முறையிட்ட போது ஒலிபெருக்கி மூலம் நாங்கள் எதுவும் சொல்ல முடியாது, பொதுமக்கள் தான் கவனமாக பார்த்து அடுத்து வரும் ரயிலில் ஏறிக் கொள்ள வேண்டும் என்று அலட்சியமாக பதில் கூறினர். எனவே வரும் நாட்களில் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories:

>