×

கோயில் நிலத்தை அபகரித்தால் குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயில் நிலத்தை அபகரித்தால் குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் நிலம், சொத்து நகையை மீட்கும் நடவடிக்கையை கண்காணிக்க சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாக முன்வந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க விளம்பரம் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவிலின் அறங்காவலரை சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் மீதான சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடரலாம் என்றும் அறநிலையத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் கூடுதல் உத்தரவுகளை நீதிபதி பிறப்பித்துள்ளார். அதன்படி கோவில் நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து அந்த நிலங்களை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தவறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்துவிட்டு அதன்பிறகு அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கோயில் நிலங்களை அபகரிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், அதேபோல டிஜிபிக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தமிழக டிஜிபி தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்து அதன் அடிப்படையில் டிஜிபிக்கு இந்த குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கோயில் நிலங்கள், சொத்துக்கள், நகைகள் ஆகியவற்றை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த சிறப்பு பிரிவை பொதுமக்கள் அணுக ஏதுவாக தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும். அனைத்து கோயில்களிலும் அந்த தொலைபேசி எண்ணையும் பக்தர்கள் பார்வைக்கு படும் வகையில் ஒரு விளம்பர பலகையில் வைக்க வேண்டும் என்றும் அறநிலையத்துறையின் அலுவலகங்களில் உள்ள அறிவிப்பு பலகையிலும் வெளியிட வேண்டும் என்றும் அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chennai High Court ,Temple Land , Temple land, kundar law
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...