நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் தான் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது!: கடும் கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: நீலகிரியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விடுமுறை காலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டத்தில் சட்டவிரோத கட்டுமானங்களை வரண்முறைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அச்சமயம் மனுதாரரின் கோரிக்கை மனு குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளால் தான் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதிகள் அமர்வு,  நீலகிரியில் சட்டவிரோத ரிசார்ட்டுகள் அதிகளவில் உள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் நச்சுப்புகை பரவுவதால் இயற்கையின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் நீலகிரியில் உள்ள குடியிருப்புகளில் சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதிக்கக்கூடாது என குறிப்பிட்ட நீதிபதிகள், குடியிருப்புகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கி இருக்கிறார்களா? என்பதை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

அதுமட்டுமின்றி குடியிருப்புகள் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது என்பது சட்டவிரோதம் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து, விடுமுறைக்காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால் போதுமான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories:

>