×

தேன்கனிக்கோட்டை அருகே 3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானை கர்நாடக வனத்திற்கு விரட்டியடிப்பு: விவசாயிகள் நிம்மதி

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே 3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானையை வனத்துறையினர் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இதனால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு, விவசாய நிலத்திற்கு காவலுக்கு சென்ற 2 விவசாயிகளை, அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை மிதித்துக் கொன்றது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் காலை, வெங்கடேசப்பா என்பவரை அதே யானை கொன்றது. இதனால் பீதியடைந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள், இந்த ஆட்கொல்லி யானையை விரட்டியடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாவட்ட வனஅலுவலர் கார்த்திகேயனி தலைமையில், வனச்சரக அலுவலர் சுகுமார் உட்பட 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.  அவர்கள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதி திம்மசந்திரம் காட்டில் முகாமிட்டுள்ள ஆட்கொல்லி யானையை, ஜவளகிரி வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், யானை காட்டை விட்டு வெளியே வராததால், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை காட்டை விட்டு வெளியே வந்த யானையை தாரை தப்பட்டைகள் அடித்து ஜவளகிரி வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர். பின்னர் அங்கிருந்து கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். 3 பேரை கொன்ற ஒற்றை யானை விரட்டப்பட்டதால் விவசாயிகள், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.



Tags : Karnataka forest ,Dhenkanikottai , Killer elephant kills 3 near Dhenkanikottai Chasing the Karnataka forest: Farmers relieved
× RELATED கோயிலில் வசித்த ஆதரவற்றவர் மீட்பு