ஊட்டி தாவரவியல் பூங்காவில் ரூ.3 லட்சத்திற்கு மலர் நாற்றுக்கள் விற்பனை: சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உற்பத்தி செய்யப்பட்ட மலர் நாற்றுக்கள் ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நீலகிரி  மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துச்  செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலான சுற்றுலா  பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் வருகிறார்கள். இங்குள்ள மலர் செடிகள், அழகு தாவரங்கள், பெரணி செடிகள்,  மரங்கள் மற்றும் பல்வேறு வகையான கள்ளிச் செடிகள் உட்பட பல்வேறு  மலர்களையும், தாவரங்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.  இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி,  மலர் செடிகளையும் அதிகளவு வாங்கிச் செல்கின்றனர்.

இதனால், சுற்றுலா  பயணிகளுக்காக பல்வேறு வகையான மலர் நாற்றுக்களை உற்பத்தி செய்து பூங்கா  நிர்வாகங்கள் விற்பனை செய்கின்றன. ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள  நாற்று விற்பனை நிலையத்தில் சக்குலன்ஸ், கேக்டஸ், பால்சம், பிகோனியா,  ஜெரோனியம், ஹைட்ராஞ்சியா, பசியா, கோலியஸ், ஹைவி உட்பட பல்வேறு வகையா  நாற்றுக்கள் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த பல  மாதங்களாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த  மாதம் 23ம் தேதி முதல் சுற்றுலா தலங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து கடந்த மாதம் 23ம் தேதி முதல் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள்  வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு செல்வது  மட்டுமின்றி, அங்குள்ள நாற்று விற்பனை நிலையத்திற்கு சென்று நாற்றுக்களை  வாங்கிச் செல்கின்றனர். கடந்த 23ம் தேதி முதல் இதுவரை ரூ.3 லட்சம்  மதிப்பிலான பல்வேறு வகையான மலர் நாற்றுக்களை சுற்றுலா பயணிகள் வாங்கிச்  சென்றுள்ளனர்.

Related Stories:

More
>