×

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நீட் மதிப்பெண் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தில் மாணவி சௌந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என மாணவி சௌந்தர்யா விரக்தியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேட்டூர் தனுஷ், அரியலூர் கனிமொழி உயிரை துறந்த நிலையில் மாணவி சௌந்தர்யா தவறான முடிவு எடுத்துள்ளார். மதிப்பெண் குறையும் என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தற்கொலை எண்ணம் வருவோர் அதிலிருந்து விடுபட 104 என்ற எண்ணில் மனநல ஆலோசனை பெறலாம். நீட் தேர்வெழுதிய மாணாக்கர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தை சேர்த்தவர் கூலித்தொழிலாளியான திருநாவுக்கரசு. இவருடைய நான்காவது மகள் சௌந்தர்யா. இவர் வேலூரில் உள்ள தோட்டப்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்து மருத்துவம் சேர வேண்டும் என்ற கனவோடு கடந்த ஞாயிறன்று நடந்த நீட் தேர்வை எழுதியுள்ளார். தேர்வை சரியாக செய்ய முடியாத காரணத்தினால் வீட்டில் வந்து சோகமாக இருந்து வந்ததாகவும், மதிப்பெண் குறையும் பட்சத்தில் தனக்கான மருத்துவ இடஒதுக்கீடு கிடைக்காது என்ற அச்சத்தில் இருந்ததாக பெற்றோர், உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த மனநிலையில் இருந்த மாணவி காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென அவருடைய அம்மாவின் புடவையில் வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவருடைய பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காட்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தற்போது விசாரணை நடத்துகின்றனர். மாணவி உயிரிழந்தது இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் 12ஆம் வகுப்பில் 600க்கு 518 மதிப்பெண் எடுத்துள்ளார். நீட் மதிப்பெண் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் தான் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : Katpadi ,Vellore district , NEET Exam, student, suicide
× RELATED வில்வநாதீஸ்வரர் கோயில் பிரமோற்சவ...