×

மும்பையில் இருந்து நெல்லைக்கு கடத்தப்பட்ட ரூ.6 கோடி மதிப்புள்ள சோலார் பேனல்கள்

மதுரை: மதுரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். மும்பையில் இருந்து சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான சோலார் பேனல்களை ஏற்றிவந்த கண்டெய்னர் லாரி நேற்று இரவு சந்தேகத்திற்கிடமான வகையில் வந்துள்ளது. இந்த நிலையில் கருப்பாயூரணி பகுதியில் வணிகவரித்துறை இணை ஆணையர் இந்திரா தலைமையிலான குழு சோதனை நடத்தியுள்ளது.

இந்த சோதனையில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான சோலார் பேனல்கள் உரிய ஆவணங்கள் இன்றி நெல்லைக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் இந்த கண்டெய்னர் லாரியின் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தியதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் அருகே இந்த கண்டெய்னர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவந்ததன் காரணமாகவே தற்போது காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் அனைத்திற்கும் வரி செலுத்தப்படும் பட்சத்தில் லாரியை மீண்டும் விடுவிப்பதாக தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்வதற்கான ஒரு முறைகேடு நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. ரூ.40 லட்சம் அபராதம் செலுத்தும் பட்சத்தில் லாரியை விடுவிப்பதற்கான வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் மும்பையை சேர்ந்த சிஎஸ்இ டெவலப்மென்ட் கம்பெனியில் இருந்து நெல்லை மானூர் பகுதியில் உள்ள கிளீன்டெக் சோலார் கம்பெனிக்கு இந்த சோலார் பேனல்கள் கொண்டுவந்தது தெரியவந்துள்ளது. இதுபோன்று முன்னரே வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல்துறை, வணிகவரி துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mumbai , Solar panels
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!