×

கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை.. தேர்தலில் தனித்து நின்று பாமகவின் வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம் : ராமதாஸ் சபதம்!!

சென்னை : உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக பாமக அறிவித்துள்ளதால் அதிமுக உடனான அதன் கூட்டணி முறிந்துள்ளது. தேர்தலில் கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் பாமக தலைவர் ஜிகே மணி ஆலோசனை நடத்தினார். அதிமுக உடன் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் பல மாவட்டங்கள் பாமக செல்வாக்கு உள்ள பகுதி என்பதால் தனித்து போட்டியிட வேண்டும் என பெரும்பாலான நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பாமகவால் கூட்டணி கட்சியினர் பலன் அடைந்ததாகவும் ஆனால் அவர்களால் பாமகவுக்கு எந்த பலனும் இல்லை என்றும் தெரிவித்தார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அதிமுகவில் சீட் கிடைக்காதவர்கள் கூட்டணி தர்மத்தை மீறி சுயேட்சியாக நின்றதாகவும் அவர்களை கூட எடப்பாடி பழனிசாமியால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

சரியான தலைமை இல்லாததால் அதிமுக தொண்டர்கள் பாமகவுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கவில்லை என்றும் அவர் கடுமையாக சாடினார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், கூட்டணி வைத்தாலும் கேட்ட சீட் கிடைக்காது என்றும் தெரிவித்தார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று பாமகவின் வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம் என்றும் ராமதாஸ் தெரிவித்தார். இதையடுத்து அக்கட்சியின் தலைவர்கள் ஜிகே மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்றும் நாளையும் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்றும் தெரிவித்தார். 


Tags : AIADMK ,Bamaka ,Ramadan , ராமதாஸ்
× RELATED 2026ல் பாமக தலைமையில் ஆட்சியா? இந்த...