ராஜஸ்தானில் நடந்த நூதன மோசடி நீட் தேர்வு வினாத்தாள் ரூ.35 லட்சத்துக்கு விற்பனை: தேர்வு எழுதிய மாணவி உட்பட 8 பேர் கைது

ஜெய்ப்பூர்: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் ரூ.35 லட்சத்திற்கு பேரம் பேசப்பட்டு, நூதன முறையில் மோசடி செய்த 18 வயது மாணவி உட்பட 8 பேரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு கடந்த 12ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தீவிர கண்காணிப்புக்குப் பிறகு மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் சிகார் பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் இருந்து வினாத்தாள் கசியவிடப்பட்டு மோசடி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அதிரடியாக செயல்பட்டு, முறைகேடாக தேர்வு எழுத முயன்ற 18 வயது மாணவி தினேஷ்வரி குமாரி, தேர்வு மைய கண்காணிப்பாளர் ராமன் சிங், தேர்வு மைய நிர்வாக பிரிவு பொறுப்பாளர் முகேஷ், மாணவியின் மாமா உட்பட 8 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: தேர்வு மைய கண்காணிப்பாளர் ராமன் சிங்கின் நண்பர் நவரத்னா என்பவர் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். அவருடைய நண்பர் அனில் யாதவ்வின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுனில் யாதவின் உறவினர்தான் தினேஷ்வரி. தினேஷ்வரி நீட் தேர்வு எழுதும் மையத்தின் கண்காணிப்பாளராக ராமன் சிங் இருந்துள்ளார். இவர்கள் தினேஷ்வரி மாமாவிடம் நீட் தேர்வு விடைகளை சொல்வதற்கு ரூ.35 லட்சம் பேரம் பேசி உள்ளனர். தேர்வு மையத்தில் வினாத்தாள் தரப்பட்டதும் அதை ராமன் சிங் செல்போனில் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்புவார்.

தேர்வு மையத்திற்கு வெளியில் இருப்பவர்கள் மூலம் அந்த வினாத்தாள் வேறொரு நபரிடம் தரப்பட்டு உரிய விடைகள் தயார் செய்யப்படும். அந்த விடைகள் மீண்டும் ராமன் சிங் செல்போனுக்கு அனுப்பப்படும். அவர் தினேஷ்வரி சரியான விடைகளை எழுத உதவுவார். இதுதான் அவர்களின் திட்டம். இதற்காக முன்பணமாக ரூ.10 லட்சத்துடன் தினேஷ்வரின் மாமா தேர்வு மையத்திற்கு வெளியே பணத்துடன் காரில் அமர்ந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த முறைகேடும் நடக்கும் முன்பாகவே 8 பேரும் கைதாகி உள்ளனர். இதுதவிர உபியில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக 2 பேர் கைதாகி உள்ளனர்.

Related Stories:

>