இடைத்தேர்தலில் தாக்கல் செய்த மம்தா வேட்புமனுவில் 5 வழக்குகள் மறைப்பு: பாஜ தரப்பு ஆட்சேபனை

கொல்கத்தா: மேற்கு வங்க இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த வேட்புமனுவில் அவர் மீதான 5 கிரிமினல் வழக்கு விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக பாஜ தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் பாஜ வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனாலும் முதல்வராக பதவியேற்றுள்ள அவர் 6 மாதத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இதற்காக வரும் 30ம் தேதி பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜ தரப்பில் பெண் வக்கீல் பிரியங்கா  திப்ரீவல் களமிறக்கப்பட்டுள்ளார். இருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், பாஜ வேட்பாளர் பிரியங்காவின் தேர்தல் ஏஜென்ட், தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த வேட்புமனுவில் அவர் மீது அசாம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள 5 கிரிமினல் வழக்குகளை மறைத்துள்ளார். அவை வேட்புமனுவில் அவர் குறிப்பிடவில்லை. எனவே வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்’’ என ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

* பாஜ எம்பி வீட்டருகே மீண்டும் குண்டு வீச்சு

சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் பாஜ தலைவர்கள், திரிணாமுல் கட்சியினரால் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு வருகிறது. இந்நிலையில், வடக்கு 24 பர்கனாஸ் பகுதியில் பாஜ எம்பி அர்ஜூன் சிங் வீட்டருகே காலி இடத்தில் நேற்று 2வது முறையாக வெடிகுண்டு வெடித்தது. ஏற்கனவே கடந்த 8ம் தேதி அர்ஜூன் சிங் வீட்டருகே நடந்த குண்டுவெடிப்பில் அவரது வீட்டின் கேட் சேதமடைந்தது. முதல் குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இது குறித்து எம்பி அர்ஜூன் சிங் அளித்த பேட்டியில், ‘‘இது திட்டமிட்ட தாக்குதல். இதற்கு பின்னால் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது. என்னை குண்டு வீசி கொல்லப் பார்க்கிறார்கள். மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை’’ என்றார்.

Related Stories:

More
>