×

பாகிஸ்தான் ஐஎஸ்ஐயிடம் பயிற்சி பெற்ற 6 தீவிரவாதிகள் கைது: டெல்லி, ராஜஸ்தான், உபியில் சிக்கினர்

புதுடெல்லி: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடம் பயிற்சி பெற்றவர்கள் உட்பட 6 தீவிரவாதிகள் டெல்லி, ராஜஸ்தான், உபியில் நடந்த அதிரடி வேட்டையில் சிக்கினர். இதன் மூலம் பண்டிகை காலத்தில் பயங்கர நாசவேலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்து தடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறி உள்ளனர். இந்தியாவில் குறிப்பிட சில மாநிலங்களில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், பண்டிகை காலங்களில் நாச வேலைகள் செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச உளவு அமைப்புகள் எச்சரிக்கை செய்தன. இதன் அடிப்படையில் டெல்லி போலீசார் சிறப்பு அதிரடிப் படை அமைத்து பல்வேறு மாநில போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில், மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒரு தீவிரவாதி ராஜஸ்தானின் கோடா பகுதியிலும், உபியில் 3 தீவிரவாதிகளும், டெல்லியில் 2 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒசாமா, ஜீசான் என்ற 2 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். இவர்கள் மஸ்கட் வழியாக பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக சென்று, 15 நாட்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடம் பயிற்சி பெற்றவர்கள். அங்கு அவர்களுக்கு ஏகே 47 உள்ளிட்ட துப்பாக்கிகள் இயக்குவது கற்றுத் தரப்பட்டதற்கான ஆதாரங்கள் கைப்பற்றுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த 6 பேரும் பல்வேறு நாசவேலை செய்யும் திட்டத்துடன் இந்தியாவில் தங்கி இருந்துள்ளனர். இவர்களைத்தவிர வேறு பிற தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என்பது குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுத கடத்தல் கைதான தீவிரவாதிகள் 6 பேரும் 2 குழுவாக வந்துள்ளனர். ஒரு குழுவினர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் சகோதரர் அனீஸ் இப்ராகிம் தலைமையில் செயல்பட்டுள்ளனர். இவர்கள், எல்லைக்கு அப்பால் இருந்து ஆயுதங்களை கடத்தி வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு குழுவினர் ஹவாலா மூலம் பணம் திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Tags : Pakistan ,ISI ,Delhi ,Rajasthan ,Uttar Pradesh , 6 militants arrested by Pakistan ISI arrested in Delhi, Rajasthan, Uttar Pradesh
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி