ஐஎஸ்எல் கால்பந்து தொடர் 8வது சீசன் அட்டவணை அறிவிப்பு: நவ.19ல் கோவாவில் தொடக்கம்

மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 8 வது சீசனுக்கான முதல் கட்ட அட்டவணை வெளியாகி உள்ளது. எல்லா ஆட்டங்களும் நவ.19ம் தேதி முதல் கோவாவில் நடக்கும். நாட்டின் முக்கிய கால்பந்து தொடரான இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டியில் சென்னையின் எப்சி, பெங்களூர் எப்சி, கேரளா பிளேஸ்டர்ஸ் எப்சி, ஐதராபாத் எப்சி, மும்பை சிட்டி எப்சி, நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி, எப்சி கோவா, ஏடிகே மோகன் பகான், எஸ்சி ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர் எப்சி, ஒடிஷா எப்சி என 11 அணிகள் பங்கேற்கின்றன.

கடந்த 7 தொடர்களில் கொல்கத்தா 3 முறையும், சென்னை 2 முறையும், பெங்களூர் மற்றும் நடப்பு சாம்பியன் மும்பை அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்நிலையில் 8வது தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. அதில் முதல் கட்டமாக நவ.19ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜன.9ம் தேதி வரையில் நடைபெற உள்ள முதல் கட்ட ஆட்டங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. எஞ்சிய ஆட்டங்களுக்கான அட்டவணை டிசம்பரில் வெளியாகும்.

கொரோனா பரவல் காரணமாக  8வது தொடருக்கான அனைத்து போட்டிகளும் கடந்த ஆண்டைப் போன்று கோவாவில் மட்டும் நடைபெறும். அங்குள்ள வாஸ்கோ, பாம்போலிம், பதோர்தாவில் உள்ள அரங்குகளில் ஆட்டங்கள் நடக்கும். நவ.19ம் தேதி நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில்  ஏடிகே மோகன் பகான்- கேரளா பிளேஸ்டர்ஸ் எப்சி அணிகள் மோத உள்ளன. சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் நவ.13ம் தேதி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. ஆட்டங்கள் தினமும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். சனிக்கிழமைகளில் 2 ஆட்டங்கள் நடக்கும். அவை முறையே இரவு 7.30 மணிக்கும் , இரவு 9.30 மணிக்கும் தொடங்கும்.

Related Stories:

>