×

‘மாஸ்க்’ போடாததால் இளைஞனின் கால், கையில் ஆணி அடிப்பு?.. உத்தரபிரதேச போலீசார் மீது பகீர் குற்றச்சாட்டு

பரேலி: ‘மாஸ்க்’ போடாததால் இளைஞனின் கால், கையில் உத்தரபிரதேச போலீசார் ஆணி அடித்து வழக்கு பதிவு செய்ததாக, பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜோகி நவாடாவைச் சேர்ந்த ஷீலா தேவி என்பவர், தனது மகன் ரஞ்சித்துடன் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கொடுத்த புகாரில், ‘கடந்த 24ம் தேதி இரவு 10 மணியளவில், எனது மகன் ரஞ்சித் வீட்டிற்கு வெளியே சென்றிருந்தார். திடீரென்று மூன்று போலீசார் அவரைத் தடுத்தனர். அப்போது, ரஞ்சித் முகக்கவசம் அணியவில்லை. இதனால் ஜோகி நவாடா போலீசார், என் மகனை புறக்காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், என் மகன் குறித்த எந்த தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை. இரண்டு நாட்களாக என் மகனைத் தேடிக்கொண்டே இருந்தேன். இதுதொடர்பாக போலீசிலும் புகார் அளித்தேன். அவர்கள் என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முகக் கவசம் அணியாமல் சென்றதால், என் மகனின் கைகள் மற்றும் கால்களில்  போலீசார் ஆணிகளை அடித்து காயப்படுத்தி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட 3 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார். இதன்பின்னர், போலீஸ் எஸ்பி ரோஹித் சிங் சஜ்வான், காயமடைந்த ரஞ்சித்தை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கால், கைகளில் யார் அடித்தார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் எஸ்பி ரோஹித் சிங் சஜ்வான் கூறுகையில், ‘ரஞ்சித்தின் கால் மற்றும் கைகளில் ஆணி அடிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதன் அறிக்கையை மருத்துவர் கொடுத்துள்ளார். அதில், 8 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பாக காயங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரிவான அறிக்கை அடுத்த ஓரிரு நாட்களில் கிடைக்கும். இரண்டு வெவ்வேறு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஒரு புகைப்படத்தில் காலில் ஒரு ஆணி அடிக்கப்பட்டுள்ளது. அவரது கையில் ஆணி அடிக்கப்படவில்லை. இரண்டாவது புகைப்படத்தில் அப்படி இல்லை. போலீசார் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாக ஆரம்ப  விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த இளைஞன் மீது  இரண்டு வழக்குகள் உள்ளன. அவரை கைது செய்யாமல் இருக்க நாடகம்  நடத்தி உள்ளார்’ என்றார். தொடர்ந்து, மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஞ்சித், நேற்றிரவு பரதாரி போலீசாரால் கைது  செய்யப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். …

The post ‘மாஸ்க்’ போடாததால் இளைஞனின் கால், கையில் ஆணி அடிப்பு?.. உத்தரபிரதேச போலீசார் மீது பகீர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Bagheer ,Uttar Pradesh ,Bareilly ,Bagir ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...