×

தேவையில்லாத பணியாளர்களை நீக்க இணை ஆணையர் தலைமையில் 5 பேர் குழு: ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள பணியிடங்களில் தேவையில்லாதவற்றை நீக்கம் செய்திடவும் பரிந்துரைகள் மேற்கொள்ள துறையளவிலான உயர்மட்ட அலுவலர்களை கொண்ட குழு ஒன்று அமைத்திடலாம் என கருதப்படுகிறது. எனவே, பணியிடஎண்ணிக்கை ஆய்வுக்கு குழு அமைத்து ஆணையிடப்படுகிறது. அதன்படி, திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன் இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். அவர் தலைமையில் சிவகங்கை இணை ஆணையர் தனபால், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இணை ஆணையர் லட்சுமணன், காஞ்சிபுரம் இணை ஆணையர் ஜெயராமன், திருப்பூர் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்.

இக்குழுவினர் விரிவாக ஆய்வு மேற்கொண்டு தங்களது அறிக்கையினை 30 நாட்களுக்குள் ஆணையருக்கு அளித்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த குழுவினர், ஆய்வர் பணியிடங்களை பொருத்தவரை ஒரு ஆய்வருக்கு அதிகபட்சமாக 100 கோயில்கள் மட்டுமே இருக்க வேண்டும். 4 முதல் 5 வட்டத்திற்கு ஒரு உதவி ஆணையர் இருக்க வேணடும். ஒரு மாவட்டத்திற்கு ஒரு இணை ஆணையர், ஒவ்வொரு இணை ஆணையர் அலுவலகத்திலும் மேலாளருக்கு அடுத்த நிலையில் உதவி ஆணையர்  இருக்க வேணடும். 5 அல்லது 6 மாவட்டங்களை ஒருங்கிணைந்து ஒரு கூடுதல் ஆணையர் அலுவலகம், அவற்றில் அலுவலக பணிகள் மேற்கொள்ள தேவையான அளவு உதவி ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அமைச்சு பணியாளர்களுக்கு இருக்க வேண்டும். தேவையில்லாத பணியிடங்களை நீக்கம் செய்திட பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : 5 member committee headed by Associate Commissioner to dismiss unnecessary staff: Commissioner Kumarakuruparan Action Order
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...