தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு முறையாக அனுப்பப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை:தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோலவே, முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு விலக்கு சட்ட மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சட்ட முடிவானது நீட் தேர்வு முறையால் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற பாதிப்புகளை சரி செய்வதற்கு மாற்றாக அனைவரும் பயன்பெற தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றியும், அவற்றுக்கான சட்ட வழிமுறைகளை பற்றியும் முழுமையாக ஆராய்ந்து பரிந்துரை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனை தலைவராக கொண்டு, சில கல்வியாளர்களை கொண்டு உயர்மட்ட குழுவை அரசு அமைத்தது.

அந்த உயர்மட்ட குழு 86 ஆயிரம் பேருக்கும் அதிகமானோரிடம் கருத்து கேட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, அதன்பிறகே புதிய சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு, சட்டமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. நிச்சயம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக முதல்வர் தொடர்ந்து அதற்கான முயற்சிகளை எடுப்பார். நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினமே ஆளுநர் கையெழுத்துக்காக அந்த சட்டமுன்வடிவு அனுப்பப்பட்டிருக்கிறது. அவர் கையெழுத்து போட்டதும், அந்த சட்ட முன்வடிவு குடியரசு தலைவருக்கு போகும். குடியரசு தலைவருக்கு தமிழக முதல்வர் கொடுக்கும் அழுத்தம், வலியுறுத்தல் காரணமாக தீர்மானம் உடனடியாக நடைமுறைக்கு வரும்.

Related Stories:

More
>