இன்ஜினியரிங் தர வரிசை பட்டியல் வெளியீடு: 1.74 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்..! 17ம் தேதி முதல் பொது பிரிவினருக்கு ஆன்லைனில் கலந்தாய்வு

சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1.74 லட்சம் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் நேற்று காலை வெளியிடப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் துவங்குகிறது. மேலும் நடப்பு ஆண்டுக்கான கலந்தாய்வில் 440 கல்லூரிகள் பங்கேற்க உள்ளன. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை. இதன் காரணமாக கடந்த கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால் கொரோனா பரவல் 2வது அலையால் மேல்நிலை தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பும் வெளியானது. இதைத்தொடர்ந்து பிளஸ் 2 நேரடி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க சிறப்பு வழிகாட்டு குழு ஒன்றை அரசு அமைத்தது. இக்குழுவின் அறிக்கைபடி, 10, 11ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

ஜூலை 30ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீட் தேர்வு, பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே கடந்த ஜூலை 19ம் தேதியே பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். மாணவர்கள் ஆன்லைன் மூலம் மதிப்பெண்களை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் 2021-22 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரையில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஏற்கெனவே ஒருசில அரசு உதவி பெறும் கல்லூரிகள், மதிப்பெண் இன்றி, பெயர், முகவரி, விரும்பிய பாடப்பிரிவுகள் குறித்த விவரங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பங்களை சேகரித்தாலும், பொதுத்தேர்வு முடிவுகளின் படி மீண்டும் விண்ணப்பங்களை பதிவிறக்கும் செய்து, பதிவிட அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பி.இ, பி.டெக். உள்ளிட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கடந்த ஜூலை 26ம் தேதி முதல் www.tneaonline.org அல்லது www.tndte.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்தது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்ப பதிவை மேற்கொண்டனர். கடந்த ஆக.24ம் தேதியின் படி மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அரசுப் பள்ளி மாணவர்கள் 22,671 பேரும் விண்ணப்பித்தனர். கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், நடப்பு கல்வி ஆண்டில் பெரும்பாலான மாணவர்கள் ஒரே கட்-ஆப் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஒரே கட்-ஆப் மதிப்பெண் உள்ளவர்களுக்கு, ரேண்டம் எண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆக.25ம் தேதி மாணவர்களுக்கான சம வாயப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 50 உதவி மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் www.tneaonline.org என்ற இணையதளத்தில் பொறியியல் தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பித்த 22,671 அரசுப் பள்ளி மாணவர்கள் உள்பட மொத்தம் 1,74,930 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டிடல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 461 கல்லூரிகள் பங்கேற்ற நிலையில், உள் கட்டமைப்பு, போதிய ஆசிரியர்கள் இன்மை ஆகிய காரணத்தால் சில கல்லூரிகளின் உரிமைத்தை நீட்டிக்க தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மறுத்துவிட்டது. அதன்காரணமாக நடப்பு கல்வி ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வில் 440 கல்லூரிகளில் உள்ள 1,51,870 சேர்க்கை இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியாகி இருக்கும் நிலையில், தொழிற்கல்வி படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் முன்னுரிமை அடைப்படையிலான கலந்தாய்வு வருகிற 17ம் தேதி முதல் 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விளையட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும் வருகிற 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை இணைய வழியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்.27 முதல் அக்.27ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களை விட குறைவான சேர்க்கை இடங்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: பி.இ., பிடெக்., படிப்பில் சேர 1,74, 930 விண்ணப்பங்கள் வந்துள்ளன. நடப்பாண்டில் 20 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். இதில், 1,39,033 தகுதியான விண்ணப்பங்கள் வந்துள்ளது. தற்போதுள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் 1, 51, 870 இடங்கள் உள்ளன.

இந்த கணக்கின்படி, கல்லூரிகளில் உள்ள 20 ஆயிரம் இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவில்லை. அதனால் விண்ணப்பித்த அனைவருக்கும் இன்ஜினியரிங்க ‘சீட்’ கிடைக்கும். மாணவர்களுக்கான கவுன்சலிங் நாளை முதல் ஆன்லைனில் நடக்க உள்ளது. அரசு அறிவித்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு இந்த ஆண்டு நடைமுறைக்கு வரும். வரும் 18ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கான ஒதுக்கீட்டு உத்தரவுகளை வழங்க உள்ளார். விண்ணப்பித்து சான்று பதிவேற்றம் செய்யாமல் உள்ளவர்கள் என்று பார்த்தால் 3200 பேர் உள்ளனர். அதனால் அவர்கள் விண்ணப்பங்கள் தகுதியற்றது. தனியார் பொறியியல் கல்லூரிகள் இதுவரை தங்கள் இடங்களை சரண்டர் ஏதும் செய்யவில்லை. தற்போது 440 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். புதியதாக அறிவிக்கப்பட்ட கல்லூரிகளில் அடுத்த ஆண்டில் இருந்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Related Stories:

>